பின்னணிப் பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்

பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலமானார்.

ஏ.எல்.ராகவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவரான இவர், 1950-களில் இருந்து 1970 வரை தமிழ் திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவரது மனைவி பிரபல நடிகை எம்.என்.ராஜம் ஆவார்.

இவர் பாடிய காலத்தால் அழியாத சில சிறந்த பாடல்களாக, ‘எங்கிருந்தாலும் வாழ்க’, ‘சீட்டுக்கட்டு ராஜா’, ‘என்ன வேகம் நில்லு பாமா’, ‘அங்கமுத்து தங்கமுத்து’, ‘பொம்பளை ஒருத்தி இருந்தாளாம்’ உள்ளிட்ட பல பாடல்களால் காணப்படுகின்றன.

இவர் கடைசியாக ‘ஆடாம ஜெயிச்சோமடா’ என்கிற படத்தில் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

ஏ.எல்.ராகவனின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, இவரின் மறைவு தமிழ் திரைப்படத் துறைக்கும் இசை இரசிகர்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும் எனவும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் மறைந்தாலும் அவரது பல பாடல்கள் மக்கள் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button