அரச ஊழியர்களுக்கு விரைவில் இலவச விமானச் சீட்டு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரயில் வொரன்ட் சலுகைக்கு மாற்றீடாக இலவச உள்ளூர் விமானப் பயணச் சீட்டு வழங்குவதற்கான நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், இது தொடர்பிலான பிரேரணை வெகு விரைவில் அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவுள்ளதாகவும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் ஓகஸ்ட் முதல் அரச ஊழியர்களுக்கு இலவச உள்ளூர் விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது அமைச்சில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனடிப்படையில் மூன்று ரயில்வே வொரன்டுக்களுக்குப் பதிலாக அரச ஊழியர்கள் ஒரு உள்ளூர் விமான பயணச்சீட்டைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இத்தெரிவு அமையுமென்றும் அவர் விளக்கமளித்தார்.

மிக ஆரம்ப காலத்தில் மூன்று அல்லது நான்கு ரயில்வே வொரன்டுக்களை பயன்படுத்தாத அரச ஊழியர்களுக்கு விமானச்சீட்டு ஒன்றை வழங்கும் நடைமுறை வழக்கத்தில் இருந்துள்ளது. இது தொடர்பில் தான் தற்போது ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே சலுகையை மீண்டும் அரச ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே எமது விருப்பம். அமைச்சருடனும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் இது தொடர்பில் கலந்துரையாடியதன் பின்னர் விரைவில் இந்த யோசனையை அமைச்சரவைக்கு முன்வைப்போம்.

இதன் மூலம் அரச ஊழியர்கள் இரத்மலானையிலிருந்து மத்தள, மட்டக்களப்பு, திருகோணமலை, சீகிரிய, கொழும்பு, பலாலி போன்ற ஏதேனும் தாங்கள் விரும்பிய இடத்துக்கான பயணச்சீட்டை பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

Related Articles

Back to top button