பாகிஸ்தானை பழிதீர்த்த இந்தியா

பாகிஸ்தானிடம் கடந்தாண்டு சம்பியன்ஸ் கிண்ண தொடரில் அடைந்த படுதோல்வியை நேற்றையதினம் ஆசியக் கிண்ணப்போட்டிகளில் ஈட்டிய அபார வெற்றியின் மூலம் ஈடுசெய்தது இந்தியா.

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் சுற்று போட்டியில் நேற்று இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஆசியக் கிண்ண  கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுப்போட்டிகளில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. ஒரு வருடத்திற்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுவதால் இந்தப்போட்டியை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்திய அணியில் ஷர்துல் தாக்குர் மற்றும் கலீல் அஹமது ஆகியோருக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா அணியில் சேர்க்கப்பட்டனர். நாணயச் சுழற்சியில்வென்ற பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடத் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் இன்னிங்ஸை இமாம் உல்ஹக் மற்றும் ஃபகர் ஜமன் ஆகியோர் ஆரம்பித்தனர்.

புவனேஸ்வர் குமார் தொடக்க ஜோடியை விரைவில் வெளியேற்றினார். புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் தொடக்க ஆட்டக்காரர்களான இமாம் உல்ஹக் மற்றும் ஃபகர் ஜமன் அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். 3 ரன்களுக்குள் அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்த பாபர் ஆசம் – சோகைப் மாலிக் ஜோடி அணியை மீட்கப் போராடியது. நிதானமாக விளையாடிய இந்த இணை 3- வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடியை குல்தீப் யாதவ் பிரித்தார். இதன்பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து வெளியேறியதால் அந்த அணி 43.1 ஓவர்களுக்கு 162 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதன்பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 86 ரன்கள் குவித்தது. ரோஹித் ஷர்மா 52 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினர். சிறிது நேரத்தில் தவான் தனது விக்கெட்டை இழந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்த அம்பத்தி ராயுடு – தினேஷ் கார்த்திக் மேற்கொண்டு விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டனர். நிதானமாக ஆடிய இந்த ஜோடி வெற்றியை எளிதாக்கியது. இந்திய அணி 29 ஓவர்களில் 164 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. அம்பத்தி ராயுடு – தினேஷ் கார்த்திக் தலா 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்

Related Articles

Back to top button