முஸ்லிம் நாடுகளுக்கிடையிலான டிரம்பின் பயணத்தடையின் மாற்றங்கள்


பல மாத சட்டப் போராட்டத்திற்குப் பிறகு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் 6 நாடுகள் மீது விதித்த, இரண்டாவது தற்காலிக பயணத் தடையின் திருத்தப்பட்ட வடிவம் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த ஜூன் 29 அன்று அமலுக்கு வந்த அந்த நிர்வாக உத்தரவில், இரான் , லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு 90 நாட்களுக்கும், அகதிகளுக்கு 120 நாட்களுக்கும் அமெரிக்காவினுள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
பயணத் தடை: இதுவரை
வெளிநாட்டவர்களின் குடியேற்றம் குறித்த கடுமையான அணுகுமுறையை தன் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய அம்சமாக்கிய அதிபர் டிரம்ப், பதவியேற்ற குறுகிய காலத்திலேயே தற்காலிகப் பயணத் தடை உத்தரவைப் பிறப்பித்தார்.
பயங்கரவாத அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டைக் காக்க இந்நடவடிக்கை அவசியம் என்று டிரம்ப் கூறினாலும், இது இஸ்லாமியர்களை நியாயமற்ற முறையில் குறிவைக்கும் செயல் என்று அவரின் எதிர்ப்பாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் டிரம்ப் பிறப்பித்த பயண தடை ஆணை பெருந்திரள் போராட்டங்களை தூண்டியதோடு மட்டுமல்லாமல் விமான நிலையங்களில் குழப்பத்தையும் விளைவித்தது.
ஆனால் அது பல கீழமை நீதிமன்றங்களால் நிறுத்திவைக்கப்பட்டது.
இப்போது எது மாறியுள்ளது?
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் இந்த வாரத்திய தீர்ப்பு, அந்த பயணத் தடைக்கு எதிரான கீழமை நீதிமன்றங்கள் விதித்த தடை உத்தரவுகளை ஒரு பகுதி விலக்கியுள்ளது.
ஆனால் அமெரிக்காவில் வசிப்பவர்களுடனான “அங்கீகரிக்கப்பட்ட உறவுகளை நம்பகத்தன்மையுடன் நிரூபிப்பவர்களுக்கு” ஒரு பெரும் விதிவிலக்கை நீதிபதிகள் அளித்துள்ளனர்.
அந்த தீர்ப்பின்படி, பாதிக்கப்பட்ட ஆறு நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் வசிக்கும் தங்கள் கணவன் அல்லது மனைவி, பெற்றோர், குழந்தை அல்லது உடன் பிறந்தோர் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களைக் கொண்டவர்கள் அமெரிக்காவில் நுழைய அனுமதிக்கப்படும் வாய்ப்பை பெற்றனர்.

கடைசி நேர மாறுதலாக, டிரம்ப் நிர்வாகம் திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்களையும் நெருங்கிய குடும்ப உறுப்பினர் என்னும் வரையறைக்குள் கொண்டு வந்தது.
எனினும் தாத்தா, பாட்டி, பெற்றோரின் உடன் பிறந்தவர்கள், அவர்களின் மகன் மற்றும் மகள் ஆகியோர் “அங்கீகரிக்கப்பட்ட” உறவினர்களாகக் கருதப்படமாட்டார்கள்.
அதிபர் டிரம்பின் அசல் தடை உத்தரவில் இடம் பெற்றிருந்த இராக் நாட்டின் பெயர், அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை மேம்படுத்த அந்நாடு ஒப்புக்கொண்டதால் நீக்கப்பட்டுள்ளது.
சிரிய அகதிகள் மீதான காலவரையற்ற தடையும் நீக்கப்பட்டுள்ளது.
தற்போது என்ன நடக்கிறது?
புதிய விதிமுறைகளின்படி அந்த நாடுகளை சேர்ந்த விசா மற்றும் நிரந்தரக் குடியுரிமை பெற்றுள்ளவர்கள் அமெரிக்காவினுள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். அதுபோல அப்பட்டியலில் இல்லாத நாடுகளின் பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி பயணிக்கும், இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களும் அனுமதிக்கப்படுவார்கள்.
அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டால் “கடுமையான பாதிப்பு உண்டாகும்” என்பது போன்ற காரணங்களை உடையவர்களுக்கு, அந்தந்த விண்ணப்ப அடிப்படையில் விலக்கு வழங்கப்படும் என்றும் அந்த புதிய உத்தரவு கூறுகிறது.

அக்டோபர் மாதம் வரையிலான இந்த ஆண்டுக்கான அகதிகளின் எண்ணிக்கையும் அதிகபட்சம் 50,000 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய 12 மாதங்களை விட சுமார் 35,000 குறைவாகும்.
அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றம் இவ்விவகாரத்தில் தன் இறுதி தீர்ப்பை வெளியிடும் வரை இந்த புதிய விதிமுறைகள் தொடர்ந்து அமலில் இருக்கும்
BBC