எந்த நடவடிக்கையும் இல்லாமல் இனப் பிரச்சினை தீருமா?

அரசியலமைப்புச் சீர்திருத்தம் அமுலாக்கும் போது எல்லாப் பிரச்சினையும் தீர்ந்து விடும் என்பது நல்லாட்சியின் கருத்து. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நம்புகிறது.
ஆனால் அரசியல் அமைப்புச் சீர்திருத்தத்தின் நிலைமை எவ்வாறு உள்ளதென்பதை நடைமுறையில் காண முடியும்.
அவ்வாறாயின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்பது காலம் கடத்தும் செயலேயன்றி மனப்பூர்வமாக முன்னெடுக்கப்படும் முயற்சியல்ல என்பது வெளிப்படை.
காலம்கடத்துவதன் மூலம் சம்பந்தப்பட்ட பிரச்சினையை வலுக்குறைப்புச் செய்வது ஆட்சியாளர்களின் நோக்கம்.
ஏலவே யுத்தம் முடிந்த கையோடு தமிழர் தாயகத்தை நோக்கி கடன் வழங்கும் நிதி அமைப்புக்களும் போதைவஸ்துகளுமே உள்நுழைந்தன.
கடன் வழங்கும் நிறுவனங்கள் கூவிக் கூவிக் கடனைக் கொடுத்து பலரின் உயிரைப் பறித்ததுடன் இன, மொழிப்பற்றையும் வேரறுத்து விட்டன.
பட்ட கடனைக் கட்ட வழியில்லை எனும் போது, இனம் பற்றியோ நம் உரிமை பற்றியோ சிந்திப்பதற்கு இடமே இல்லை என்றாகிவிடும்.
இது ஒருபுறத்தில் நடக்க, மறுபுறத்தில் போதைவஸ்து பாவனை, மதுப்பாவனை, வாள்வெட்டு குழுக்களின் உருவாக்கம் என எங்கள் இளம் சந்ததியை பாழாக்கும் பணிகள் நடந்தன.
அவற்றின் விளைவை இப்போது நாம் அனுபவிக்கின்றோம். யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகள் என்ற எல்லையில் எங்கள் இளைஞர்களின் போக்குகள் வேறுவிதமாக இருப்பதைக் காண முடிகின்றது.
இந்த மண்ணில் மிகப்பெரியதொரு போராட்டம் நடந்ததென்றோ என் சகோதரன், என் உறவினன் எங்கள் வாழ்வுக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்தான் என்பதையோ அறியாதவர்களாக – தெரியாதவர்களாகவே நம் இளைஞர்கள் இருக்கின்றனர்.
இதற்குக் காரணமும் உண்டு. பாடசாலைகளில் கற்கும் பாடங்களில் எம் இனம், எம் மொழி, அதன் வரலாறு, நாட்டில் நடந்த மண் மீட்புப் போர் என்பனவற்றை உள்ளடக்கும் போதுதான் அதனை கற்கும் மாணவர்கள் எங்கள் வரலாற்றை தம் மனங்களில் பதிவு செய்வர். அதிலிருந்து தேடலை முன்னெடுப்பர்.
ஆனால், எங்கள் தமிழ் மாணவர்கள் கற்பது சிங்கள வரலாற்றை. தேவநம்பிய தீசனும் சங்கமித்தை பற்றியும்தான் வரலாற்றில் படிப்பதாக இருந்தால், தமிழர் வரலாறு பற்றித் தமிழ் மாணவர் அறியக்கூடிய சந்தர்ப்பம் அறவே இல்லை எனலாம்.
வரலாற்றுப் புத்தகம் முழுமையிலும் சிங்கள வரலாறுகள் பதிப்பிக்கப்பட்டுள்ளனவேயன்றி தமிழர் வரலாறு பற்றிய எந்த விபரமும் வரலாற்று நூல்களில் இடம்பெறவில்லை.
நிலைமை இவ்வாறு கழியுமாக இருந்தால், எங்கள் இனம், எங்கள் மொழி என்ற பற்று இளம் சந்ததியிடம் இல்லாமல் போய்விடும். இதற்குப் பின்னர் தீர்வு எதற்கு என்றதாக எங்கள் நிலைமை முடிந்துவிடலாம்.
ஆகையால் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளாவது நடந்தாக வேண்டும்.

Related Articles

Back to top button