நீதிக்கான தேடல் – இலங்கை எதிர்கொள்ளும் சிக்கல்!

அனைத்துலக மட்டத்தில் பெரியளவில் தெரியப்படுத்தப்படாவிட்டாலும் கூட, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்கா மிகப் பாரிய அரசியல் அதிகாரத்துவ ஆட்சியைக் கொண்டிருந்தது. ஜனவரி 2015ல், நாட்டின் அதிகாரத்துவ கடும்போக்கு அதிபரான மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.

இதன் மூலம் மூன்றாவது தடவையாகவும் நாட்டின் அதிபராகலாம் என்ற இவரது கனவு சிதைவடைந்தது. இத்தேர்தல் மூலம் இந்த நாடானது ஜனநாயக மற்றும் அரசியல் மறுமலர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் என்கின்ற நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டது.

எனினும், இந்தப் பயணமானது சவால் மிக்கதாகவும் காணப்படுகிறது. அத்துடன் தற்போதைய அரசியல் நிலைப்பாடானது இனிவரும் மாதங்களில் இந்த நாட்டின் அரசியல் எவ்வாறானதாக இருக்கும் என்பதைச் சுட்டிநிற்கிறது.

நாட்டின் அரசியல் மாற்றத்திற்கு இடைக்கால நீதி என்பது குறிப்பிடத்தக்கதோர் பங்காகக் காணப்படுகிறது. கடந்த காலத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக தற்போதைய அரசாங்கமானது இதயசுத்தியுடன் தீவிரமாக செயற்படாவிட்டால் நாட்டில் அரசியல் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியாது.

மேலும் அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டு அரசாங்கமானது தற்போதும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை மேற்கொள்ளவில்லை.

1983 தொடக்கம் 2009 வரையான உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், சிறிலங்கா அரசாங்கப் படைகள், தமிழ்ப் புலிகளுக்கு எதிராக பல்வேறு சண்டைகளை முன்னெடுத்தனர். புலிகள் அமைப்பின் மூத்த தலைமைத்துவம் அழிக்கப்பட்ட இறுதிக்கட்ட யுத்தத்துடன் இந்த உள்நாட்டுப் போர் முடிவிற்கு வந்தது.

missing-demo

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 40,000 வரையான உயிர்கள் காவுகொள்ளப்பட்டதாக நம்பகமான தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. ஆனாலும் இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இதில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் மக்களாவர்.

2015 ஒக்ரோபர் மாதம் சிறிலங்கா அரசாங்கத்தின் இணை ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் சபையில் சிறிலங்கா மீதான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானமானது பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்கம் போன்ற பல்வேறு விடயங்களை வலியுறுத்தியிருந்தது. குறிப்பாக, வெளிநாட்டு நீதிபதிகள், சட்டவாளர்கள், வழக்கறிஞர்கள், விசாரணையாளர்கள் போன்றவர்களை உள்ளடக்கிய அனைத்துலகப் பங்களிப்புடனான பொறுப்புக் கூறல் பொறிமுறையை சிறிலங்கா உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இவ்வாறான பல்வேறு விடயங்களை சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் நிறைவேற்றவில்லை. சிறிலங்கா அதிபர் ஜூன் மாதம் வழங்கிய நேர்காணல் ஒன்றில், வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை எனத் தெரிவித்திருந்தார். ‘அவ்வாறு தேவைப்பட்டால் நாங்கள் வெளிநாட்டு தொழினுட்ப உதவியைப் பெற்றுக் கொள்வோம். எந்தவொரு அர்ப்பணிப்போ அல்லது நிபந்தனைகளோ இன்றியே இந்த உதவி பெற்றுக் கொள்ளப்படும்’ என சிறிலங்கா அதிபர் தெரிவித்திருந்தார்.

இதன் பின்னர் ஒரு மாதம் கழித்து சிறிலங்காவின் பொறுப்புக் கூறல் பொறிமுறையில் எந்தவொரு அனைத்துலகப் பங்களிப்பும் இருக்காது என சிறிசேன வலியுறுத்தியிருந்தார்.

வேறு சில நிகழ்வுகளில் சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்பை முதன்மைப்படுத்துவதாகவும் சிறிசேன தெரிவித்திருந்தார். ‘எந்தவொரு போர்க் கதாநாயகர்களும் ஆதரவற்றவர்களாக மாறுவதற்கு நான் வழிவகுக்கமாட்டேன்’ என கடந்த ஜூன் மாதம் சிறிசேன தெரிவித்திருந்தார். இதேபோன்றே பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளும் பொருத்தமற்ற வகையில் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

பொறுப்புக்கூறல் என்பது சில காரணங்களைப் பொறுத்தளவில் மிகப்பாரியதொரு விடயமாகும். இதுதொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் பணியாற்றத் தொடங்கவில்லை. அதாவது அனைத்துலக சமூகத்தின் அழுத்தத்திலிருந்து தன்னைப் பாதுகாப்பதற்கு கொழும்பானது பொறுப்புக்கூறலை மேற்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, அரசாங்கத்தால் புறக்கணிக்கப்படும் மாற்று நீதி நிகழ்ச்சி நிரல் என்பது மிகப் பாரியதொரு சர்ச்சைக்குரிய விடயமாகக் காணப்படுகிறது.

மூன்றாவதாக, இந்த நாடானது மீண்டுமொரு யுத்தத்திற்குத் திரும்பிச் செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியமானதாகும்.

இறுதியாக, சிறிலங்காவில் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக நீண்ட காலமாக ஒடுக்கப்படும் தமிழ் சமூகமானது நீதியைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

mangala-unhrc

கொழும்பானது தற்போது தனது பொறுப்புக்கூறல் பொறிமுறையைத் தாமதித்து வருவது போல் தெரிகிறது. இதன் ஒரு அங்கமாக தற்போது அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பை, சிறிலங்கா அதிபர் தொடர்பு கொண்டு பேசியிருந்தார். அதாவது போர்க் கால குற்றச்சாட்டுக்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் தொடர்பாக அனைத்துலக சமூகத்தால் சிறிலங்கா மீது இடப்படும் அழுத்தத்திலிருந்து தனது அரசாங்கத்தை விடுவித்துக் கொள்வதற்காகவே டொனால்ட் ட்ரம்ப்புடன் சிறிசேன தொலைபேசியில் தொடர்புகொண்டிருந்தார்.

இதற்கும் அப்பால், பொறுப்புக்கூறல் தொடர்பில் தான் தீவிரம் காண்பிக்கவில்லை என சிறிசேன வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். சிறிலங்கா அரசாங்கமானது தனது நிலைமாறு நீதிச் செயற்பாட்டிற்கு நிலையான அனைத்துலக சமூகத்தின் உதவியை நாடுவதற்கான சிறந்த வாய்ப்பைத் தவறவிடக் கூடாது.

சிறிலங்காவின் நீதிச் செயற்பாட்டில் அனைத்துலக சமூகம் பங்களிப்பதானது அரசியல் ரீதியாக உணர்ச்சி மிக்க விடயமாகும். எனினும், கணிசமான அனைத்துலக பங்களிப்பை உள்ளடக்காத எந்தவொரு நடவடிக்கை தொடர்பிலும் தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. பல பத்தாண்டுகால பாரபட்சங்கள் மற்றும் பல்வேறு உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் செயற்படுத்தப்பட்ட போதிலும் இவை தமிழ் சமூகத்திற்கு நன்மையளிக்கவில்லை. இதனால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் சிங்கள அதிகாரத்துவ அரசின் மீது ஆழமான அவநம்பிக்கையைக் கொண்டுள்ளது.

சிறிலங்காவின் பெரும்பான்மை மக்கள் சமூகமாக தமிழ் மக்களும், தமிழ் மற்றும் முஸ்லீம்கள் இரு பெரும் சிறுபான்மை சமூகங்களாகவும் உள்ளனர். சிறிலங்கா இராணுவத்தினர் மீது அவர்களால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அனைத்துலக சமூகம் தனது அழுத்தத்தை வழங்கியுள்ள அதேவேளையில், சிறிலங்காவில் இந்தச் சூழலானது முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது.

சிறிலங்கா இராணுவமானது பெரும்பான்மை சிங்கள மக்களின் ஏகோபித்த  ஆதரவைப் பெற்றுள்ளது. அத்துடன் இந்த இராணுவமானது தமிழ்ப் புலிகளை போரில் தோற்கடித்ததன்    மூலம் சிங்கள மக்களின் பெருமதிப்பைப் பெற்றுள்ளது. கொழும்பின் உயர்வர்க்க அரசியலானது போர்க்கால பொறுப்புக்கூறல் தொடர்பாக உண்மையில் பணியாற்ற விரும்பினாலும் கூட, சிங்கள மக்கள் மத்தியில் தனக்கெதிரான வெறுப்பைச் சம்பாதித்து விடக்கூடாது என்பதற்காகவே இதில் தயக்கம் காண்பித்து வருகிறது.

இவ்வாண்டு உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பெரும்பான்மை சமூகத்தின் அதிருப்திக்கு உள்ளாகிவிடக்கூடாது என்பதில் சிறிலங்கா அரசாங்கம் உறுதியாக உள்ளது. சிறிலங்கா அரசாங்கமானது பொறுப்புக்கூறல் நடவடிக்கையை முன்னெடுத்தால், அதனுடைய முக்கியத்துவம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கும்.

இதற்கும் அப்பால், இது ஒரு பலவீனமான அரசாங்கமாகும். சில அரசியற் கட்சிகள் ஒன்றிணைந்தே தற்போதைய தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி போன்ற முக்கிய இரு அரசியற் கட்சிகளும் இதில் அங்கம் வகிக்கின்றன. இந்நிலையில், பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்பாத கோட்பாடுகளை அமுல்படுத்துவதில் அரசாங்கம் தயக்கம் காண்பிக்கிறது.

புதியதொரு அரசியல் சாசனம் ஒன்றை வரைவதற்கான தனது ஆதரவைப் பெற்றுக் கொள்வதில் சிறிசேன அரசாங்கம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. வடக்கு ,கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு என்பது புதிய அரசியல் சாசனத்தில் உட்சேர்க்கப்பட்டுள்ளது. இது இந்த நாட்டில் நிலையான சமாதானத்தை எட்டுவதற்கா சிறந்த வழிமுறையாக உள்ளது.

கெட்டவாய்ப்பாக, நிலையான சமாதானத்தின் அவசியமான ஒரு கூறாக அரசியற் தீர்வு, விளங்கும் அதேவேளையில், இவ்வாறு கருதுவதானது தவறான ஒன்றாகக் காணப்படுகிறது. தவிர, அரசாங்கத்தின் அரசியல் சீர்திருத்த முயற்சிகள் மூலம் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய சமஸ்டி நிர்வாகத்தை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் என எதிர்பார்க்க முடியாது.

இவை மிகவும் கடினமான விடயங்களாகும். இதனால் சிறிலங்காவின் தற்போதைய அரசியலில் பல்வேறு பின்னடைவுகள் காணப்படுகின்றன. இவற்றுக்கப்பால், கொழும்பானது 2015 ஒக்ரோபர் மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பில் காத்திரமான நகர்வுகளை முன்னெடுத்தால் அது வரவேற்கத்தக்கதாகும்.

அனைத்துலகப் பங்களிப்பை உள்ளடக்கிய இடைக்கால நீதிச் சேவை என்பது இந்த நாட்டிற்கு ஏன் முக்கியமானது என்பதை சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் மக்களுக்கு எடுத்துக்கூறுவதன் மூலம் இந்த முயற்சியை ஆரம்பிக்க முடியும். தமிழ் அரசியற் கைதிகளை உடனடியாக விடுவித்தால் அது ஊக்கமளிக்கும் ஒரு செய்தியாக இருக்கும்.

அதேபோன்று வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளித்தலும் நாட்டில் நிலையான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும்.

சிறிலங்காவின் இடைக்கால நீதித் திட்டங்கள் தொடர்பாகவும் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் நிலைப்பாடு தொடர்பாகவும் அதிருப்தி காணப்படுகிறது. இவை தொடர்பாக தேசிய அரசாங்கம் மீளவும் ஆராய்ந்தால், நல்லிணக்கம் மற்றம் நிலையான சமாதானத்தை விரைவில் எட்ட முடியும். இவை மிகவும் வேகமாகவும் வினைத்திறனுடனும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

ஆங்கிலத்தில்  – Taylor Dibbert
வழிமூலம்        – The diplomat
மொழியாக்கம் – நித்தியபாரதி

Related Articles

Back to top button