நோய்கள் வரும் வரை காத்திருக்காது எம்மை நாம் காத்துக்கொள்வோம்

மிழ் எங்கள் Healthமூச்சு என்று பேசிக்கொள்கிறோம். இதிலிருந்து மூச்சு எவ்வளவு முக்கியமானது என்பது எமக்குத் தெரிந்திருக்கிறது. சுவாசம் எமது சுகத்துடன் பின்னிப்பிணைந்தது. சுவாசம் சுத்தமானதாக இருக்கவேண்டும். அப்போதுதான் நாம் சுகத்துடன் வாழ முடியும்.

வீடுகள், கட்டடங்கள் கட்டப்படும் பொழுது அவற்றிற்கு எவ்வளவு பெரிய யன்னல்கள், கதவுகள் இருக்கவேண்டும் என சட்ட விதிகள் இருக்கின்றன. இவை வீடுகளில் போதுமான அளவு காற்றோட்டத்தைப் பேணி மக்களைச் சுகத்துடன் பாதுகாக்கும் நோக்கத்திற்காகவே ஏற்படுத்தப்பட்டனவையாகும். இவ்வாறு அமைக்கப்படும் யன்னல்களையும் கதவுகளையும் திருடர்களிற்கும் நுளம்புகளிற்கும் பயந்து மூடி வைத்துவிட்டு அதனுள்ளே ஒழிந்து வாழ்ந்துவருகின்றோம். இதனால் நோய்வாய்ப்படுகின்றோம்.

சுத்தமான காற்றில் 20வீதம் ஒட்சிசன் இருக்கிறது. இது மனிதனின் சுகவாழ்வுக்கு முக்கியமானது. மனிதன் சுவாசிக்கும்பொழுது இந்த ஒட்சிசன் உள்ளெடுக்கப்பட்டு காபனீரொக்சைட்டு என்ற வாயு வெளிப்படுகின்றது. எனவே பூட்டிய அறையினுள் நாம் உறங்கும்போது காற்றில் ஒட்சிசன் அளவு குறைவடைந்து காபனீரொக்சைட்டின் அளவு அதிகரிக்கின்றது. இவ்வாறு அசுத்தமடைந்த காற்றை நாம் மீண்டும் மீண்டும் சுவாசிப்பது ஆபத்தானதாகும். இந்த அசுத்தக்காற்றை மின்விசிறி போட்டுச் சுற்றவைப்பதில் எந்தப்பயனும் இல்லை. இதனுள் ஒரு நுளம்புச் சுருளும் கொளுத்தி வைக்கப்படின் நிலைமை இன்னும் மோசமானதாக இருக்கும்.

இவ்வாறாக அடைக்கப்பட்ட வீட்டினுள் நாம் அடைந்திருக்கும்பொழுது எமக்குப் பல்வேறுபட்ட நோய்கள் ஏற்படும் ஆபத்து இருக்கிறது. அவையாவன தலையிடி, முட்டு, நித்திரைக்குறைவு, இலகுவில் கோபம் அடைதல், கல்வி கற்றலில் கஸ்டம், குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள், பல்வேறுபட்ட நுரையீரல் சம்பந்தமான நோய்கள், கிருமித் தொற்றுகை போன்றவையாகும்.

எமது சொத்துக்கள் தொலைந்துவிடும் என்று கதவடைப்புச் செய்து எமது சுகத்தைத் தொலைத்துவிடுகிறோம். சொத்தைப் பாதுகாக்க எமது சுகத்தைத் தியாகம் செய்யத் துணிந்துநிற்கிறோம். திருடர்கள் எமது உடமைகளைத் திருடுகிறார்களோ இல்லையோ எமது உடற்சுகத்தைத் திருடிக்கொள்கிறார்கள். பூட்டிய வீட்டினுள் எரியும் நுளம்புச்சுருள்கள் நுளம்புகள் இரத்தத்தைக் குடிப்பதைக் குறைக்கின்றனவோ இல்லையோ மனிதனின் வாழ்நாளைக் குறைத்துவிடுகின்றன.

நாம் ஏன் இந்தக்கதவடைப்புப் போரை கைவிடக்கூடாது. யன்னல்களில் மாட்டக்கூடிய நுளம்புவலைகளைத் தயார்செய்து அவற்றை யன்னலில் மாட்டி யன்னல் கதவுகளைத் திறந்துவைப்போம். வீடும் அறைகளும் காற்றோட்டம் உள்ளதாக இருப்பதை உறுதிசெய்துகொள்வோம். வீட்டின் உட்புறத்தைத் தூசிகள் படியாதவாறு சுத்தமாக வைத்திருப்போம். நோய்கள் வரும்வரை காத்திருக்காது நோய்கள் வருமுன் எம்மைக் காத்துக்கொள்வோம்.

 

நன்றி

சி. சிவன்சுதன்
வைத்திய நிபுணர்
யாழ்.போதனா வைத்தியசாலை

மூலம் – தமிழ் ஆரோக்கியம் இணையம்

Related Articles

Leave a Reply

Back to top button