ஒலிம்பிக் போட்டிகள் 2016 – ஓர் சிறப்புக் கண்ணோட்டம்.

636006714065597086-81932308_Rio-2016-Olympics-e1463463766287-640x330

2016 ஆம் ஆண்டிற்கான 31 வது கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலின் ரியோ நகரில் ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்கிறார்கள்.இதிலே அகதிகளை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் ஓர் நாடும் களம் காண்கிறது.

கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடாத்தும் முதலாவது தென் அமெரிக்க நகராக பெருமை பெற்றுள்ளது ரியோ.

28 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 306 பிரிவுகளில் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன. இப்போட்டிகள் அனைத்தும் பிரேசில் நாட்டின் ரியோ நகரின் 33 இடங்களிலும் சேவ் போலோ நகரின் 5 இடங்களிலும் நடைபெறவுள்ளன. இவ்வருட போட்டிகளுக்கான தொடக்க விழா 5 ஆம் திகதி மரக்கானா  அரங்கில் நடைபெறவுள்ளது. இதே அரங்கில் 21 ஆம் திகதி நிறைவு விழாவும் இடம்பெறவுள்ளது.

உலக தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், ரசிகர்கள் என மொத்தம் 78 ஆயிரம் பேர் தொடக்க விழாவை கண்டு களிக்க இருக்கிறார்கள். தொடக்க விழா நிகழ்ச்சி மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும் என்று கூறப்படுகிறது. இலங்கை  நேரப்படி ஆகஸ்ட் 6 ம் தேதி அதிகாலை 4.30 க்கு ஆரம்ப  விழா நடைபெறவுள்ளது.

ஆரம்ப விழா கால்பந்து மைதானமான மரகானாவில் பிரேசில் நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

3 மணி நேரத்துக்கு மேலாக நடைபெறவுள்ள ஆரம்ப விழாவில் முதல் நிகழ்ச்சியாக ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படுகிறது.

தென்அமெரிக்காவில் அரங்கேறும் முதல் ஒலிம்பிக்கான இதில் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு உணர்வு பூர்வமான கலை நிகழ்ச்சிகள், அதிரடி நடனங்கள், சாகசங்கள் மற்றும் லேஷர் ஷோ, வண்ணமயமான வாணவேடிக்கை உள்ளிட்டவை இடம் பெற உள்ளது. பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.அதைத் தொடர்ந்து ஒலிம்பிக் கொடி ஏற்றப்படும்.

அதன்பிறகு ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள நாடுகளின் கொடி அணிவகுப்பு நடைபெறும். ஒலிம்பிக்கின் பிறப்பிடம் கிரேக்கம் என்பதால் அந்நாட்டினர் முதல்வரிசையில் கொடியேந்திச் செல்வார்கள். அதைத் தொடர்ந்து மற்ற நாட்டினர் அணிவகுக்க, இறுதியாக போட்டியை நடத்தும் பிரேசில் வீரர், வீராங்கனைகள் அணிவகுத்துச் செல்வார்கள்.

பிரேசிலின் பிரபல பாப் பாடகர்களான அனிட்டா, கேட்டனோ வெலாஸ்கோ, கில்பெர்ட்டோ கில் ஆகியோர் தங்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளால் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளனர். இதேபோல் பிரேசிலின் கலாசாரத்தைப் பறைசாற்றும் வகையிலான கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. ஆரம்ப விழாவில் 4800 கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். ஆரம்ப விழாவின் இறுதியாக இரவைப் பகலாக்கும் வகையிலான வான வேடிக்கைகள் ரியோ டி ஜெனீரோவை அதிர வைக்கவுள்ளது.

இம்முறை அதிகப்படியாக அமெரிக்கா சார்பில் பெல்ப்ஸ் உட்பட 550 வீரர்கள் போட்டிகளில் பங்குபெறுகின்றனர். போட்டியை நடத்தும் நாடு பிரேசில் சார்பாக 464 வீரர்கள் பங்குபெறுகின்றனர். இலங்கை சார்பில் 9 வீரர்கள் பங்குகொள்கின்றனர்.

ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 118 வீரர், வீராங்கனைகள் 15 விளையாட்டுகளில் களம் இறங்க இருக்கிறார்கள். ஒலிம்பிக் வரலாற்றில் பங்கேற்போரின் எண்ணிக்கையில் இந்தியா 100 ஐ தாண்டி உள்ளது இதுவே முதல் முறையாகும். துப்பாக்கி சுடுதல், பேட்மிண்டன், மல்யுத்தம், குத்துச்சண்டை, டென்னிஸ், ஆண்கள் ஹாக்கி ஆகியவற்றில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு 85 ஆயிரம் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர ஒலிம்பிக் போட்டி தொடர்பான பணிகளில் அரசு அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள், தனியார் ஊழியர்கள், 50 ஆயிரம் தன்னார்வ தொண்டர்கள் என்று மொத்தம் 90 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

பல மாற்றங்களை சந்தித்த ஒலிம்பிக் போட்டிகள் முதன் முறையாக சர்வதேச ஒலிம்பிக் குழுவின் கீழ் 1896 ஆம் ஆண்டு அதன் தாயகமான கிரீஸில் ஏதென்ஸ் நகரில் நடைபெற்றது.

இப்போட்டிகளே இன்றுவரை சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளின் முறையான ஆரம்பமாக கருதப்படுகிறது. அதன் பின்னர் தொடர்ச்சியாக 4 வருடங்களுக்கொருமுறை நடாத்தப்பட்டு வருகின்றது. 1916, 1940, 1944 ஆண்டுகளில் உலகப்போர் காரணமாக போட்டிகள் தடைப்பட்டிருந்தது.

மற்றைய ஆண்டுகளில் தொடர்ச்சியாக சரியான முறையில் நடைபெற்று வருகின்றது.

கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஐக்கிய அமெரிக்கா 977 தங்கப்பதக்கங்கள் 758 வெள்ளிப்பதக்கங்கள் 668 வெண்கலப்பதக்கங்கள் என மொத்தமாக 2403 பதக்கங்களை பெற்று அசைக்கமுடியாத பதக்க வேட்டை நடாத்தியுள்ளது. இதற்கு அடுத்த நிலையில் சோவியத் ரஷ்யா 395 தங்கம் 319 வெள்ளி 296 வெண்கலம் என மொத்தமாக 1010 பதக்கங்களுடன் காணப்படுகின்றது.

பிரித்தானியா(780), பிரான்ஸ்(669), சீனா(473) என்பன அடுத்த இடங்களில் உள்ளன. (இலங்கை 1 வெள்ளி 1 வெண்கலம் உடன் 111 ஆவது இடத்தில் உள்ளது.)

தனி நபர் சாதனைகளை பொறுத்தவரை அமெரிக்கா நீச்சல் வீரர் மைகேல் பெல்ப்ஸ் 18 தங்கம் 2 வெள்ளி 2 வெண்கலம் என 22 பதக்கங்களை பெற்று முதலிடம் வகிக்கிறார். ரஷ்யா ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை லரிஸ லதீனினா 9 தங்கம் 5 வெள்ளி 4 வெண்கலம் என 18 பதக்கங்களுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.

தற்கால விளையாட்டில் தடகளத்தில் அதிகம் பேசப்படும் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் 6 தங்க பதக்கங்களை பெற்றுள்ளார்.

பிரேசிலில் மலிந்து கிடக்கும் ஊழல், கடுமையான பொருளாதார நெருக்கடி, பெரும் போராட்டங்கள், ஸிகா வைரஸ் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு தடைகளை தாண்டி இந்த ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. ஸிகா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏராளமான வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்கிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் போட்டிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கிறது. இதுதவிர ரியோ டி ஜெனீரோ, அதிக அளவில் குற்றங்கள் நடக்கக்கூடிய ஒரு நகரமாகும். அங்குள்ள ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்தில் ஆஸ்திரேலியா, டென்மார்க், சீன அணிகளின் உடைமைகள் ஏற்கெனவே திருடு போயுள்ளன. இதனால் போட்டியின்போது அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 85 ஆயிரம் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பதற்கு வழக்கம்போல் இந்த முறையும் அமெரிக்கா, சீனா இடையேதான் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய ரஷிய தடகள வீரர்கள் ஒட்டுமொத்தமாக தடை செய்யப்பட்டுள்ளதோடு, அந்நாட்டைச் சேர்ந்த மேலும் சில விளையாட்டு வீரர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரிட்டன் பெரிய சவாலின்றி 3-ஆவது இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button