ஒரே தடவையில் 20 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி இந்திய விஞ்ஞானிகள் சாதனை.(காணொளி இணைப்பு)

isro_rocket_launch
இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஒரே நேரத்தில் 20 செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி – சி34   எனும் ராக்கெட். விண்ணில் ஏவப்பட்ட சில நிமிட நேரங்களில் 20 செயற்கை கோள்களும் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது இஸ்ரோவின் மிகப்பெரிய சாதனையாகும்.

இஸ்ரோ(indian space research organisation-ISRO) நேற்று(22-06-2016) விண்ணில் செலுத்தியுள்ள பி.எஸ்.எல்.வி ராக்கெட் மற்றும் அதன் மூலம் அனுப்பப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் குறித்த தகவல்களை பார்க்கலாம்.

பி.எஸ்.எல்.வி-சி34 ராக்கெட் மூலம் வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் உள்பட மொத்தம் 20 செயற்கைக்கோள்கள் இன்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இந்த செயற்கைக்கோள்களின் மொத்த எடை ஆயிரத்து 288 கிலோவாகும்.

இதில், 727 புள்ளி 5 கிலோ எடை கொண்ட இஸ்ரோவின் கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோள் மற்றும் சென்னை தனியார் பல்கலைகழகத்தின் செயற்கைக்கோள் மற்றும் புனே பொறியியல் கல்லூரியின் ஸ்வயம் செயற்கைக்கோள் ஆகியவை இந்தியாவின் செயற்கைக்கோள்களாகும். ‌வானிலை ஆய்வு, கனிம வளங்களை கண்டறிதல் உள்ளிட்ட பயன்பாட்டிற்காக கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

புனே கல்லூரியின் ஸ்வயம் செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு பயன்பாட்டிற்கானது. இதைத்தவிர அமெரிக்காவின் 13 செயற்கைக்கோள்கள், கனடாவின் 2 செயற்கைக்கோள்கள், ஜெர்மனி மற்றும் இந்தோனேஷியா நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு செயற்கைக்கோள் என மொத்தம் 17 செயற்கைக்கோள்கள் பிஎஸ்.எல்.வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

வணிக ரீதியாக, இஸ்ரோ இதுவரை வெளிநாடுகளைச் சேர்ந்த 74 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. அவற்றில் கடந்தாண்டும், நடப்பாண்டும் சேர்த்து 34 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதுவரை அனுப்பப்பட்ட வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் அனைத்தும் 19 பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த் 2008-ம் ஆண்டு ஒரே ராக்கெட் மூலம் 10 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியதே இஸ்ரோவின் சாதனையாக இருந்தது. இதுவரை பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் 36 முறை செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. அவற்றில், 34 முறை வெற்றி கிடைத்துள்ளது.

 

Related Articles

Leave a Reply

Back to top button