தேர்தலுக்காக அமுல்படுத்தப்பட்டுள்ள சிறப்பு பாதுகாப்பு

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) முதல் சிறப்பு பாதுகாப்பு திட்டம் அமுலில் இருக்குமென பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலியா சேனரத்ன தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலினை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக ஜாலியா சேனரத்ன மேலும் கூறியுள்ளதாவது, “வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும்போது கூடுதல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் கடமைகள் முடியும் வரை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சோதனைச் சாவடிகள் நாடு முழுவதும் இருக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 2020 பொதுத்தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இன்று (திங்கட்கிழமை) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் ஓகஸ்ட் 5ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என ஜூன் மாதம் 10ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்தார்.

Related Articles

Back to top button