Trending

நாடாளுமன்றத் தேர்தலும் தமிழ் தேசியக் கட்சிகளின் வழி வரைபடங்களும்..!

முகநூலிலும் சமூக வலைத் தளங்களிலும் கைபேசிச் செய்திகளிலும் நாம் காணும் உலகம் மிகச் சிறியது. அதுதான் உலகம் என்பது போல ஒரு மாயத் தோற்றம் நமக்கு உண்டாகிறது.

ஆனால் அது மட்டும் உலகம் அல்ல. அதை விடப் பெரிய உலகம், ஒரு அப்பாவி உலகம், அரசியல் தெளிவற்ற ஒரு உலகம், உணர்ச்சிவசப்படும் உலகம், சாதி பார்த்து சமயம் பார்த்து பிரதேசம் பார்த்து சொந்தம் பார்த்து சலுகை பார்த்து வேறு என்னவெல்லாமோ பார்த்து வாக்களிக்கும் ஒரு உலகம் இலத்திரனியல் கட்டமைப்புக்கு வெளியே இருக்கிறது.

அந்த உலகத்துக்குள் எந்தக் கட்சிக்கு ஆதரவு அதிகம் உண்டோ அந்தக் கட்சிதான் அதிகப்படியான வாக்குகளைப் பெறும். தமிழ் அரங்கில் உள்ள எந்தவொரு கட்சியுமே எதையுமே அடிச்சுப்புடிச்சு தரப்போவதில்லை. அதுவல்லாத வேறு வழிகளில்தான் எதையாவது செய்ய வேண்டும். அதற்குரிய பொருத்தமான வழி வரைபடம் எந்தக் கட்சியிடம் உண்டு?

முதலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பார்ப்போம்..

இக்கட்சியின் தலைவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக கூறிவந்தவைகளைத் தொகுத்துப் பார்த்தால் ஒரு தெளிவான சித்திரம் நமக்குக் கிடைக்கும். இனப் பிரச்சினைக்கான தீர்வு எனப்படுவது அதிகபட்சம் உள்ளூர் தன்மை வாய்ந்தது. தீர்வை நோக்கி உள்ளூர்த் தரப்புகளை ஊக்குவிப்பதற்கு, வெளி உலகம் அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அந்த உள்ளூர்த் தீர்வானது தமிழ்-சிங்கள-முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருக்க வேண்டும். அதற்கு யாப்பை மாற்ற வேண்டும். யாப்பை மாற்ற மூன்றிலிரண்டு பெரும்பான்மை வேண்டும். அப்படி ஒரு பெரும்பான்மை ரணில்-மைத்திரி அரசாங்கத்தில் கிடைத்தது.

எதிரும் புதிருமாக காணப்பட்ட இரண்டு பெரிய கட்சிகளும் இணைந்து உருவாக்கிய ஒரு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அது. அது மிக அரிதானது. அந்த பெரும்பான்மையை வைத்து ஒரு யாப்பை உருவாக்கி அதற்குள் இனப் பிரச்சினைக்கான தீர்வையும் வைத்து விடலாம் என்பதே கடந்த ஐந்து ஆண்டுகால கூட்டமைப்பின் வழி வரைபடம் ஆகும்.

இந்த வழி வரைபடமானது நிலைமாறுகால நீதிக்கு உட்பட்டது. நிலைமாறுகால நீதியானது ஐ.நா.வின் 2015 ஆம் ஆண்டு தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை தீவில் உருவாக்கப்பட வேண்டும். எனவே தீர்வு முயற்சிக்கு ஐ.நா.வினதும் உலக சமூகத்தினதும் ஆதரவு உண்டு.

அந்த வழி வரைபடத்தின்படி நாடாளுமன்றம் சாசன பேரவை மாற்றப்பட்டது. யாப்பு உருவாக்கத்துக்கு குழுக்கள் அமைக்கப்பட்டன. உருவாக்கப்பட்ட ஓர் இடைக்கால வரைவு நாடாளுமன்றத்தில் இறுதியாக்கப்படுவதற்கிடையில் மைத்திரிபால சிறிசேன அதை குழப்பிவிட்டார். இனி அந்த யாப்புருவாக்க முயற்சிகளை ராஜபக்ஷக்களின் காலத்திலும் தொடரலாமா என்று கூட்டமைப்பு சிந்திக்கின்றது.

அடுத்தது தமிழ் தேசிய மக்கள் முன்னணி..

இவர்கள் பிராந்திய அரசியலையும் பூகோள அரசியலையும் தமிழ் நோக்கு நிலையிலிருந்து வெற்றிகரமாக கையாண்டு இறுதித் தீர்வை அடையலாம் என்று நம்புகிறார்கள். ஒரு நாட்டுக்குள் இரு தேசங்கள் உண்டு என்று கூறும் அந்தக் கட்சியானது தமிழ் தேசத்துக்கு உரிய இறுதித் தீர்வாக தமிழ் மக்கள் பேரவை முன்வைத்த கூட்டாட்சி தீர்வை ஏற்றுக் கொள்கிறது.

அப்படி என்றால் அந்த உச்சபட்ச தன்னாட்சியை எப்படி அடைவது? அதற்கான வழி வரைபடம் என்ன? அக்கட்சி சம்பந்தரின் வரைபடத்தை அதாவது இன்னும் ஆழமாகச் சொன்னால் நிலைமாறுகால நீதியை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படி என்றால் பரிகார நீதியை எப்படிப் பெறுவது? அதை முதலில் எங்கிருந்து தொடங்குவது?

அடுத்தது தமிழ் மக்கள் கூட்டணி..

இக்கட்சி இனப் படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றிய விக்னேஸ்வரனின் தலைமையின் கீழ் இயங்குகிறது. எனவே இனப் படுகொலைக்கு எதிரான பரிகார நீதியைத்தான் அவர்கள் பெற வேண்டும்.

ஆனால் உலக சமூகம் தமிழ் மக்களுக்கு பரிகார நீதியை தரத் தயாரில்லை. ஐ.நா. தமிழ் மக்களுக்கு நிலைமாறுகால நீதியைத்தான் தரத் தயாராக இருக்கிறது. எனவே தமிழ் மக்கள் கூட்டணி நிலைமாறுகால நீதியிலிருந்து தொடங்கி பரிகார நீதியை நோக்கிப் போவதற்கான தனது வழி வரைபடத்தை மக்கள் முன்பு வைக்க வேண்டும்.

நான்காவது தரப்பு அரசாங்கத்தோடு சேர்ந்து நிற்கும் தமிழ் கட்சிகள்..

வர்கள் முதலில் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொள்கின்றார்களா என்பதனை தெளிவுபடுத்த வேண்டும். அடுத்ததாக என்ன தீர்வை பெற்றுத் தருவார்கள் என்பதனையும் தீர்வைப் பெறுவதற்கான வழி வரைபடம் எது என்பதையும் மக்கள் முன்பு வைக்கவேண்டும்.

இந்த நான்கு தரப்புகளில் ஏற்கனவே கடந்த 11 ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதிகளாக இருந்துவந்த கூட்டமைப்பு ஒரு வரைபடத்தை முன்வைத்து அதன் பிரகாரம் குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேறியது. ஆனால் இனி வரப்போகும் அரசாங்கம் அந்த வழி வரைபடத்தை முன்னகர்த்த விடுமா?

அதில் பின்வரும் பிரச்சினைகள் உண்டு..,

முதலாவது, ராஜபக்ஷக்கள் நிலைமாறுகால நீதியை ஸ்தாபிப்பதற்கான ஐ.நா.வின் முப்பதின் கீழ் ஒன்று தீர்மானத்தை நிராகரிக்கிறார்கள். அப்படியென்றால் யாப்பு மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

இரண்டாவது, மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத்தான் அவர்களும் நாடுகிறார்கள். ஆனால் அது தனிச் சிங்கள வாக்குகளை அடித்தளமாகக் கொண்டது. எனவே அந்த மூன்றில் இரண்டு ஜனாதிபதி முறைமையை மேலும் பலப்படுத்துவதற்கு உதவுமா? அல்லது சம்பந்தர் கனவுகாணும் யாப்பு மாற்றத்துக்கு உதவுமா ?

மூன்றாவது, ராஜபக்ஷக்கள் எப்பொழுதும் அவர்களுடைய வெற்றியின் கைதிகளே. எனவே அவர்கள் தமது வெற்றிக்கு தலைமை தாங்குவார்களே தவிர வேறெதற்கும் தலைமை தாங்க மாட்டார்கள். வரும் தேர்தலில் தனிச் சிங்கள வாக்குகளை அதிகமாகப் பெற்றுவிட்டு அதைத்தாண்டி இனப்பிரச்சினை தீர்வுக்காக யாப்பை மாற்ற அவர்கள் விடுவார்களா?

தனிச் சிங்கள வாக்குகளை தனது வெற்றியின் அடித்தளமாகக் கொண்ட ஒரு கட்சி தமிழ், முஸ்லிம் உணர்வுகளை கவனத்தில் எடுக்குமா?

மேலும், கோட்டாபய இந்தியாவில் வைத்து தெளிவாகக் கூறிவிட்டார் காணி அதிகாரமும் பொலிஸ் அதிகாரமும் கிடையாது என்று. அப்படிப் பார்த்தால் சம்பந்தர் மேலும் அதிகமாக விட்டுக்கொடுக்க வேண்டி இருக்கும்.

நாலாவது, ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் சம்பந்தர் அதிகபட்சம் விட்டுக் கொடுத்தார். டிலான் பெரேராவின் வார்த்தைகளில் சொன்னால் ‘சம்பந்தரைப் போல விட்டுக் கொடுக்கும் ஒரு தலைவர் இனி கிடைக்க மாட்டார்’. அந்த அளவுக்கு விட்டுக் கொடுத்து ஒரு இடைக்கால யாப்பு வரைபை உருவாக்கிய சம்பந்தர் ராஜபக்ஷவின் காலத்தில் அதைவிட கூடுதலாக விட்டுக்கொடுக்க வேண்டி இருக்கும்.

ஐந்தாவது, அவ்வாறு விட்டுக் கொடுப்பதில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இருந்த நிலைமை இனி இருக்குமா? ஏனெனில் கூட்டமைப்பு முன்னெப்போதையும் விட உட்கட்சி பூசலால் ஈடாடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விக்னேஸ்வரனுக்கும் கஜேந்திரகுமாருக்கும் ஆசனங்கள் கிடைத்தால் அடுத்த நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பின் ஏகபோகம் சவால்களுக்கு உள்ளாகும்.

எனவே, ரணிலின் காலத்தில் விட்டுக் கொடுத்ததைப் போல இனிமேலும் விட்டுக்கொடுக்க முற்பட்டால் அதையே விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் விவகாரமாக மாற்றி தமது எதிர்ப்பைக் காட்டுவார்கள். எனவே முன்னரை விட அதிகமாக இறங்கிப் போகவேண்டிய ஒரு காலகட்டத்தில் சம்பந்தர் நிற்கிறார்.

ஆனால், இறங்கிப் போக முடியாத அளவுக்கு கட்சிக்கு வெளியே எதிர்ப்புகள் பலமடைந்து வருகின்றன. கட்சிக்குள்ளும் பூசல்கள் அதிகரிக்கின்றன. தவிர சம்பந்தருக்கும் வயதாகிவிட்டது. அவர் தளர்ந்து விட்டார். இந்நிலையில் கூட்டமைப்பின் வழி வரைபடம் முன்னரை விட அதிகமாக சோதனைக்குள்ளாகப் போகிறது.

இந்த அடிப்படையில் சிந்தித்தால் கூட்டமைப்பின் வழி வரைபடத்தை ராஜபக்ஷவின் இரண்டாவது ஆட்சிக் காலத்திலும் முன்னெடுப்பதாக இருந்தால் கூட்டமைப்புக்கு சவால்கள் எதுவுமற்ற ஏகபோக பிரதிநிதித்துவம் தேவை. அது இம்முறை கிடைக்குமா ?

அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்

Related Articles

Back to top button