மஹிந்தானந்த குற்றவாளியாக இனங்காணப்பட்டால் 3 ஆண்டுகள் சிறை

எந்த ஆதாரமும் இல்லாமல் ஆட்ட நிர்ணயம் குற்றச்சாட்டை முன்வைத்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை தரப்பு ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டதாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டுக் குறித்து விளையாட்டு அமைச்சின் சிறப்பு புலனாய்வு பிரிவு நடத்திய விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு இதுவரை எந்தவிதமான ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்று விசாரணைப் பிரிவு கூறியுள்ளது.

இதன்மூலம் விசாரணைக்குழு முன்னாள் வீரர்களை விசாரணைக்கு அழைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடந்த விசாரணையின் அறிக்கை விளையாட்டு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்டதாக அமைச்சின் சிறப்பு புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னாள் ராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்தமை தொடர்பில் முன்வைத்த குற்றச்சாட்டுகளை விளையாட்டு அமைச்சின் சிறப்புப் புலனாய்வு பிரிவு பதிவு செய்தது.

அப்போதைய தேர்வுக் குழுவின் தலைவரான அரவிந்தா டி சில்வா, முன்னாள் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க மற்றும் 2011 உலகக் கிண்ணத் தொடரின் தலைவர் குமார் சங்கக்காரஆகியோரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.மகேல ஜெயவர்தன இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு விசாரணைக்குழு முன் முன்னிலையாகியிருந்தார்.

விளையாட்டு குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் யாராவது பொய்யாக குற்றச்சாட்டை முன்வைத்தால், தண்டப் பணம் அல்லது 3 ஆண்டுகளுக்கு விஞ்சாத சிறைத் தண்டனை அல்லது இரண்டு தண்டனைகளையும் வழங்க முடியும்.

இந்த விசாரணை தொடர்பான அறிக்கை பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஜாலியா சேனரத்ன, தெரிவித்தார்.

Related Articles

Back to top button