மஹேலவிடம் இன்று சாட்சியம் பெறப்படாது

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன இன்று சாட்சியமளிக்க வருகைத்தர மாட்டார் என விசேட விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு, எதிர்வரும் நாட்களில் அவரை அழைக்கவுள்ளதாகவும் அந்த விசாரணைப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

விளையாட்டுத்துறை குற்றங்களை விசாரிக்கும் குழுவில் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னிலையாகுமாறு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த மஹிந்தானந்த அளுத்கமகே குற்றம்சாட்டியிருந்தார்.

இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக விளையாட்டுத்துறை குற்றங்களை விசாரிக்கும் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

அதற்கமைய இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் உப்புல் தரங்க மற்றும் தெரிவுக்குழுவின் முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா, முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார ஆகியோர் விளையாட்டுத்துறை குற்றங்களை விசாரிக்கும் குழுவில் ஏற்கனவே வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button