தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் – டெல்லியில் பலத்த பாதுகாப்பு

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் ஆபத்து இருப்பதால் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனைமுன்னிட்டு பொலிஸார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சந்தைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க கூடுதல் பொலிஸார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் இராணுவம் எல்லை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இருந்த போதிலும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளை பாகிஸ்தான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனாலும் பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகிறது.

மற்றொருபுறம் இந்திய எல்லை பகுதியான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கை உரிமை கோரி சீனா அச்சுறுத்தி வருகிறது. இதையடுத்து எல்லை பகுதியில் இந்திய இராணுவ துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து உள்ளன. காஷ்மீர் எல்லையில் உள்ள கிராமங்கள் மற்றும் இந்திய இராணுவ நிலைகளை நோக்கி பாகிஸ்தான் இராணுவத்தினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

ஸ்ரீநகரில் உள்ள குனிமார் பகுதியில் நாசவேலைகளில் ஈடுபடுவதற்காக பதுங்கி இருந்த 3 பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டனர். குல்காம் மாவட்டத்திலும் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி கொல்லப்பட்டார்.

இதற்கிடையே, கதுவா மாவட்டத்தில் உள்ள ரதுவா கிராமத்தின் அருகே கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களுடன் பறந்து வந்த ஆளில்லா விமானத்தை இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினார்கள்.

இந்த நிலையில், டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் காஷ்மீரில் இருந்து பயங்கரவாதிகள் சிலர் நகருக்குள் ஊடுருவி இருக்கலாம் என புலனாய்வு துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Close