பிரபாகரனை விசஜந்து என கூறிய டக்ளஸ் மன்னிப்பு கோர வேண்டும் – செ.கஜேந்திரன்

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை விசஜந்து என கூறியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மன்னிப்பு கோர வேண்டும். என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.

டில்லி சென்றுள்ள டக்ளஸ் தேவானந்தா அங்கு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விசஜந்து எனவும் அவர் தமிழ் மக்களை அழித்தார். என தொனிப்படும் வகையிலும் கருத்துத் தெரிவித்துள்ளார். இத்தகைய ஒரு கருத்தினை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமிழ் மக்களுடை விடுதலையைக் கோரி பல்வேறு இளைஞர்கள் பல இயக்கங்கள் ஊடாகப் புறப்பட்டார்கள்.

ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகளைத் தவிர ஏனை இயக்கங்கள் அனைத்தும் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில வருடங்களிலேயே இந்தியாவின் கையாட்களாக செயற்படவும் இந்தியாவின் கொள்கைக்கு ஏற்ப செயற்படவும் இனங்கிக் கொண்டனர்.

டக்ளசின் தாய் கட்சியான ஈ.பி.ஆர். எல்.எவ். வும் இத்தகைய நோக்கத்திலேயே செயற்பட்டது. இவ்வாறான நிலையில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை வளர்த்த தமிழ் மக்களையே இவ் ஏனைய இயக்கங்கள இந்திய இராணுவத்துடனும் , இலங்கை இராணுவத்துடனும் இணைந்து கொன்று குவித்தது. பின்னர் டக்ளசினுடைய ஈ.பி.டி.பி. கட்சியானது இலங்கை இராணுவத்தின் துணைப்படையாகச் செயற்பட்டு முள்ளி வாய்க்காலில் பல லட்சம் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்படுவதற்கும் துணையாக செயற்பட்டிருந்தது. பல்லாயிரக்கணக்கானவர்களை கொலை செய்த குற்றச்சாட்டு ஈ.பி.டி.பி.மீது மக்கள் சுமத்தியுள்ள நிலையில் சில வழக்குகளில் நீதிமன்றங்களும் தீர்ப்புக்களை வழங்கியுள்ளது.

இவ்வாறு இராணுவத்தின் அடிமைகளாகவும் துணைப்படைகளாகவும் இருந்த டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பியானது தமிழ் மக்களைப் பிடித்துக் கொண்ட கறையான போன்றவர்களாவர்.

தமிழ் மக்கள் மத்தியில் தேசத் துரோகியாக பார்க்கப்படுகின்ற டக்ளஸ் தேவானந்தா பிரபாகரன் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கு தமிழ் மக்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும்.

அத்துடன் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை ஒன்று இடம்பெறுமாயின் இவர்கள் மீதும் எத்தனை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும் என்பதும் அப்போது தெரியவரும் என்றார்

Show More

Related Articles

Close