முதலாவது மூவரடங்கிய “ட்ரையல் அட் பார்” விசேட மேல் நீதிமன்றம் இன்று அங்குரார்ப்பணம்

வழக்குகள் தாமதமடைவதை தவிர்க்கும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள முதலாவது மூவரடங்கிய “ட்ரையல் அட் பார்” விசேட மேல் நீதிமன்றம் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.
நீதியமைச்சர் தலதா அதுகோரல தலைமையில் இந்த விசேட மேல் நீதிமன்றம் இன்று முற்பகல் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்குகளில் தொடர்ந்தும் தாமதம் நிலவுவதை தவிர்ப்பதற்காக, மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தை ஸ்தாபிக்க வேண்டுமென பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ள முதலாவது விசேட மேல் நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிக்குமாறு சட்ட மாஅதிபரால், பிரதம நீதியரசருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் மூன்று நீதிபதிகள் அண்மையில் நியமிக்கப்பட்டனர்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் சம்பத் விஜேரத்ன, சம்பத் அபேகோன் மற்றும் சம்பா ஜானகி ஆகிய நீதிபதிகள் இந்த முதலாவது விசேட மேல் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் செயற்குழுவுடைய பிரதம அதிகாரியாக இருந்த காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகள் நால்வர் மீது சட்ட மாஅதிபரால் இந்த விசேட மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபாவை முறையற்ற விதத்தில்  பயன்படுத்தியதாக நிதித் தூய்தாக்கல் தடைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கின் பிரதிவாதிகளை எதிர்வரும் 24 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு மூவரடங்கிய விசேட நீதிமன்றத்தினால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Show More

Related Articles

Close