வலுவான நிலையில் இந்திய அணி

இங்கிலாந்து – இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட்ஜ் பிரிட்ஜ்-யில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா விராட் கோலி (97), ரகானே (81) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 329 ரன்கள் குவித்தது.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. காலையில் லேசாக மழை பெய்ததால் ஆட்டம் அரைமணி நேரம் தாமதமாக தொடங்கியது. ரிஷப் பந்த், அஸ்வின் களம் இறங்கினார்கள்.

நேற்று 22 ரன்களுடன் களத்தில் இருந்த ரிஷப் பந்த் இன்று மேற்கொண்டு 2 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து அஸ்வின் 14, ஷமி 3, பும்ரா ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற்ற இந்தியா முதல் இன்னிங்சில் 94.5 ஓவரில் 329 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 307 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, தனது கடைசி 5 விக்கெட்டுக்களை வெறும் 22 ரன்களுக்கு பறிகொடுத்தது.

இங்கிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் குக் மற்றும் ஜென்னிங்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அந்த அணி மதிய உணவு இடைவேளை வரை 9 ஓவரில் 46 ரன்கள் எடுத்து விக்கெட் ஏதும் இழக்கவில்லை.

மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள். 12-வது ஓவரின் கடைசி பந்தில் குக் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரின் முதல் பந்தில் ஜென்னிங்ஸ் 20 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் வந்த போப், இஷாந்த் ஷர்மாவின் வேகத்தில் 10 ரன்களில் அவுட்டானார். பிட்சில் பந்து நன்றாக ஸ்விங் ஆவதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அபாரமாக பந்து வீசிய ஹர்திக் பாண்டியா, ஜோ ரூட் 16, பேர்ஸ்டோவ் 15, கிறிஸ் வோக்ஸ் 8, அடில் ரஷித் 5, பிராட் 0 என அடுத்தடுத்து 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை துவம்சம் செய்தார்.

இதனால், 38 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஹர்திக் பாண்டியா 6 ஓவரில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் சாய்ந்தார். இஷாந்த் ஷர்மா, பும்ரா தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

முதல் இன்னிங்சில் 168 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா உற்சாகத்துடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தவான் மற்றும் ராகுல் மீண்டும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ராகுல் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து தவானுடன் ஜோடி சேர்ந்த புஜாரா வழக்கத்திற்கு மாறாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாசிய தவான் 44 ரன்களில் ரஷித் பந்தில் பேர்ஸ்டோவ்விடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 124 ரன்கள் குவித்தது. புஜாரா 33 ரன்களுடனும் கோலி 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டோக்ஸ் மற்றும் ரஷித் தலா 1 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். 8 விக்கெட்டுக்கள் கைவசம் இருக்க 292 ரன்கள் முன்னிலை பெற்று இந்தியா வலுவான நிலையில் உள்ளது.

Show More

Related Articles

Close