அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வானார் ராகுல்காந்தி

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை முன்னிட்டு அந்தக் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடந்த வாரம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அவரை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அவருக்கு ஆதரவாக 89 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்று (11) வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால், ராகுல்காந்தி போட்டியின்றி காங்கிரஸ் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ராகுல் காந்தி தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான சான்றிதழ் 16-ந் திகதி சோனியாகாந்தி மற்றும் முன்னணி தலைவர்கள் முன்னிலையில் வழங்கப்படவுள்ளது.

அதன் பின்னர் ராகுல்காந்தி தலைவராக பொறுப்பேற்கவுள்ளார்.

சோனியா காந்தி கட்சி பொறுப்புகளை ராகுல்காந்தியிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் காந்தி தலைவராக பதவி ஏற்றதும் கட்சியில் பல்வேறு மாற்றங்களை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.