பலவீனம் என்பது இவர்களுடையதா? இனத்தினதுடையதா?

முள்ளிவாய்காலுக்கு பின் தமிழ் அரசியலில் நாங்கள் பலவீனப்பட்டுவிட்டோம்… எம்மால் இனிமேல் எதுவும் முடியாது தருவதை வாங்கிக் கொள்ள வேண்டியது தான் என தமிழரசுக்கட்சி பேச்சாளர்கள் தாயகத்திலும் குறிப்பாக புலத்திலும் ஏன் கனடாவிலும் சொல்லி வருகின்றனர்….

முதலில் யாரோ தருவதை பெற்றுக் கொள்வதற்கு எமக்கு ஏன் ஒரு தலைமை வேண்டும்…

அவர்கள் தருவதை மக்களே நேரடியாக பெற்றுக் கொள்ளட்டுமே நீங்கள் கடையை மூடிவிடுங்களேன்…

உலகில் ஒடுக்கப்பட்ட மக்கள் போராடாமல் தமது உரிமைகளை வென்றெடுத்த ஒரு வரலாற்றை சொல்லுங்கள் பார்க்கலாம்…

இதைக் கேட்டால் நேரு குணரத்தினம் மீண்டும் ஆயுதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறார் என புலம்பாதீர்கள்…

போராட்ட வடிவங்கள் பலவழிப்படும்… நீங்கள் தான் பலமுறை சொன்னீர்கள் செய்யாவிட்டால் மக்களை திரட்டி பெரும் போராட்டம் நடத்துவோம் எண்டு…

யார் சொன்னதோ? மூன்று மாதத்திற்கு ஒரு தடவை நீங்கள் சொன்னது தான்…

ஆம் கடந்த முறை சொல்லி மீண்டும் மூன்று மாதம் வரவில்லை அதனால் இப்போது ஞாபகத்தில் வராது…

கடந்த வருடம் எழுக தமிழின் போது ஏன் அவசரப்படுகின்றீர்கள்… இன்னும் இரண்டு மாதம் பொறுங்கள் ஒன்றும் நடைபெறாவிட்டால் நாங்களும் வருகின்றோம் என்றீர்கள்….

தற்போது 10 மாதங்கள் கழிந்து விட்டது… ஆனால் 100 நாளையும் கடந்து மக்கள் தொடர்ந்தும் வீதிகளில் இன்றும் போராடிக் கொண்டுதானிருக்கிறார்கள்…

தற்போது சொல்லுங்கள் பலவீனம் உங்களுடையதா? மக்களினுடையதா?
காணி பொலீஸ் அதிகாரம் அதிகம் பேசப்படுகிறது…

மகாநாயக்கரும் கொடுக்கவே கூடாது என்றுவிட்டனர்…

உங்களுக்கு தெரியுமா? கனடாவில் காணி பொலீஸ் அதிகாரம் நகரசபைக்குடையது…

இதைத் தான் சொல்வது அதிகாரப்பரலாக்கம் என்று…

இதை வெளிப்படையாக சொல்வதில் உங்களுக்கென்ன தயக்கம்…

யாரை திருப்திப்படுத்த முயல்கின்றீர்கள்….

338 பாராளுமன்ற ஆசனங்களில் 78 தான் கியூபெக்கிற்கு 650 பாராளுமன்ற ஆசனங்களில் 59 தான் ஸ்கொட்லண்டிற்கு…

இதனால் அவர்கள் பலவீனப்பட்டவர்களா? இல்லை பிடிக்கவில்லையாயின் பொதுசனவாக்கெடுப்பு ஒன்றின் மூலம் பிரிந்து செல்லும் அவர்கள் உரிமையைத் தான் பறிந்தெடுக்க முடியுமா?…

கனடாவில் கியூபெக் எனைய 9 மாநிலங்கள் போன்று அதே அதிகாரங்கள் கொண்டதல்ல… மொழி கலாச்சாரத்தால் வேறுபட்ட மக்கள் என்ற ரீதியி;ல் தங்களைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் விசேட அதிகாரங்களை கொண்டவர்கள்…

ஒரே மொழியானாலும் வித்தியாசமான கலாச்சார பாரம்பரியத்தை கொண்டவர்கள் என்ற ரீதியில் தனிப்பாராளுமன்றம் முதல் பலவற்றை கொண்டவர்கள் ஸ்கொட்லண்ட் மக்கள்…

சுவீடனுக்கும் பின்லாந்திற்கும் இடையே ஓலண்ட் தீவு இருக்கிறது…

இது யாருக்கு சொந்தம் என தொடர்ந்த சர்ச்சையின் முடிவில் இது பின்லாந்திற்கே சொந்தம் என தீர்ப்பாகியது…

அத்தீவில் சுவீடிஸ் மக்களே அதிகம் வாழ்வதால் அவர்கள் தங்கள் தனித்துவத்தை உறுதிப்படுத்திக்கொள்ள பல அதிகாரங்களை எழுதப்பட்ட தீர்ப்பில் உறுதிப்படுத்திக் கொண்டனர்…

இதைத் தான் சொல்வது எமது இருப்பை நீண்டகாலத்திலும் தக்கவைக்கும் அதிகாரப்பரவலாக்கங்கள்… இதை தனது மக்களுக்கு சாதித்துக் கொடுப்பதற்குத் தான் ஆற்றல் உள்ள தலைமைகள் வேண்டும்…
இல்லை என்றால் ஆற்றல் இல்லை என்று சொல்லுங்கள்…

அதைவிட்டுவிட்டு பலவீனப்பட்டு விட்டோம் என கதை சொல்லாதீர்கள்… இப்போது சொல்லுங்கள்… பலவீனப்பட்டு நிற்பது தமிழ் தலைமைகளா? தமிழினமா????

நேரு குணரத்தினம்

Show More

Related Articles

Close