2ஜி அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பு செப்ரம்பர் 5-க்கு முன்னர் வெளிவரும் : சிறப்பு நீதிபதி அறிவிப்பு

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள வழக்குகளில் வரும் ஆகஸ்ட் 25-க்குப் பிறகு தீர்ப்பு அளிக்கப்படும் என்று டெல்லி சிபிஐ நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த வழக்கில் விசாரணை அமைப்புகளான மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ), மத்திய அமலாக்கத் துறை ஆகியவற்றின் வாதங்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் தரப்பு வாதங்கள் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தன.

அவற்றைப் பதிவு செய்து கொண்ட சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி, வழக்கு தொடர்புடைய ஆவணங்கள், சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள் இடம்பெற்ற ஆவணங்கள் ஆயிரக்கணக்கான பக்கங்களுக்கு இருப்பதால் அது பற்றிய விளக்கம் தேவைப்படும்போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டோருக்கு கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 5) நடைபெற்றது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, ராசா அமைச்சராக இருந்தபோது அவரது தனிச்செயலாளராக இருந்த ஆர்.கே. சந்தோலியா, ரிலையன்ஸ் ஏடிஏஜி குழும மூத்த நிர்வாகி சுரேந்திர பிப்பாரா உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்

குற்றம்சாட்டப்பட்டுள்ள மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, கலைஞர் டி.வி. முன்னாள் இயக்குநர் சரத்குமார், ஸ்வான் டெலிகாம் நிறுவன மேம்பாட்டாளர் ஷாஹித் உஸ்மான் பால்வா உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

தயாளு அம்மாளுக்கு விலக்கு

அமலாக்கத் துறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் அடுத்த விசாரணைவரை நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி ஏற்கனவே விலக்கு அளித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து சிறப்பு நீதிபதி சைனி, இந்த வழக்கின் ஆவணங்கள், தொழில்நுட்ப விவரங்கள் தொடர்புடைய கோப்புகள் போன்றவை தொடர்ந்து பரிசீக்கப்பட்டு வருவதால் அவை தொடர்பான விளக்கம் தேவைப்பட்டால் கோரப்படும் என்று கூறினார்.

இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையை வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு சிறப்பு நீதிபதி சைனி ஒத்திவைத்தார்.

அப்போது குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பு வழக்கறிஞர்கள், “ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட இந்த வழக்கின் வாதங்கள் கடந்த ஏப்ரல் மாதமே முடிந்து விட்டது. அதனால் தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்” என்றனர்.

இதையடுத்து சிறப்பு நீதிபதி சைனி, இந்த வழக்கில் கூடுதல் விவரமோ விளக்கமோ தேவைப்படாத பட்சத்தில், வரும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 5-ஆம் தேதிக்குள் தீர்ப்பு அளிக்கப்படும் என்றார்.

Show More

Related Articles

Close