சீனாவில் சூழல் மாசை கட்டுப்படுத்த வருகிறது வன நகரம்

சுற்றுச்சூழல்

அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் சுற்றுச்சூழல் மாசு என்பது கட்டுப்படுத்தவே முடியாத ஒன்றாகிவிட்டது. போக்குவரத்தின் பீக் ஹவர்ஸ் எனப்படும் காலை 8-11 மற்றும் மாலை 4-7 போன்ற நேரங்களில் எல்லாம் மேலே இருக்கும் நீல வானம் கூடத் தெரியாத அளவிற்கு வாகனப் புகை மண்டிவிடுகிறது. இதைச் சமாளிக்க பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது சீனா. கடந்த 2015ஆம் வருடம் இரண்டாம் உலகப்போரின் 70ஆம் ஆண்டு கொண்டாட்டங்களின் போது பீஜிங் அரசாங்கம் அனைத்து தொழிற்சாலைகளை மூடியும், கார்களின் போக்குவரத்தைக் கணிசமாக குறைத்தும் நீல நிற வானத்தை தெரியவைத்து இராணுவ அணிவகுப்புகளை நிகழ்த்தியது.

பல்வேறு நலத்திட்டங்கள்

இப்போது மாசுக் கட்டுபாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டுவர உள்ளது. முதற்கட்டமாக சென்ட்ரல் பாங்கின் உதவியுடன் “பசுமைக் கடன்” (Green Finance) அளிக்கும் விதமாக ஐந்து மண்டலங்களை நிறுவியுள்ளது. இதன் மூலம் சுற்றுச்சுழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத தொழில்களுக்கு நிதியுதவி செய்ய முடிவெடுத்துள்ளது. மாசைக் குறைக்கும் தொழிற்சாலைகள், ஆற்றலை பாதுகாக்கும் திட்டங்கள், பசுமையை நிலைநாட்ட உதவும் தொழில்கள் என இந்த 5 மண்டலங்களும் ஒவ்வொரு விஷயத்தை எடுத்துக் கொண்டு அதில் கவனம் செலுத்தவுள்ளது.

மேலும் இந்த விஷயத்தில் அரசாங்கம் மிகவும் சிரத்தையுடன்தான் செயல்படுகிறது என்பதை உணர்த்தும் விதமாக, கடந்த ஜனவரியில் மட்டும் கிட்டத்தட்ட 104 நிலக்கரி ஆலைகளை மூடியுள்ளது. அடுத்தக் கட்டமாக பெய்ஜிங்கில் ஓடும் 70,000 டாக்ஸிகளை எலக்ட்ரிக் கார்களாக மாற்ற உத்தரவிட்டுள்ளது. இதை ஊக்குவிக்கும் வகையில், புதைபடிவ எரிபொருளின் உற்பத்தியையும், பயன்பாட்டையும் கணிசமாக குறைத்துள்ளது.

வருகிறது வன நகரம்

சீனா சுற்றுசூழல்

அனைத்திற்கும் உச்சமாகக் காற்று மாசுபடுவதைத் தடுக்க உலகின் முதல் ‘வன நகரம்’ (Forest  City) ஒன்றை கட்டமைக்கத் தொடங்கியுள்ளது. Guangxi மாகாணத்திலுள்ள Liuzhou என்ற இடத்தில், Liujiang நதிக்கரையை ஒட்டிய 175 ஹெக்டர் நிலப்பரப்பில் Stefano Boeri என்ற கட்டடக்கலைஞரின் உதவியுடன் இதற்கான பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. 30,000 பேர் வசிப்பதற்கு ஏற்ற வகையில் கட்டப்படும் இந்த நகரத்தில், 100 விதமான பசுந்தாவார வகைகளில் 40,000 மரங்கள் மற்றும் 10 லட்சம் செடிகளைப் பயன்படுத்தவுள்ளது. இந்தப் பசும்போர்வை வருடத்திற்கு 10,000 டன் கார்பன் டைஆக்ஸைடு மற்றும் 57 டன் இதர மாசுபடுத்தும் வாயுக்களை எடுத்துக்கொண்டு 900 டன் ஆக்சிஜெனை உருவாக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தட்பவெப்ப நிலையில் மாற்றம், காற்றின் தரம் உயர்தல், சிறந்த வாழ்வாதாரம் மற்றும் வாழ்விடம் அமைதல் போன்றவை நிகழும்.

வன நகரம் என்றவுடன் ஏதோ டெக்னாலஜி இல்லாத தீவு போல் ஆகப் போகிறது என்று நினைத்துவிடாதீர்கள்! முழுக்க முழுக்க புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுடன் செயல்படப்போகும் இந்த நகரத்தில், வணிக மண்டலங்கள், குடியிருப்பு பகுதிகள், பொழுதுப்போக்குக்கான இடங்கள், ஒரு பெரிய மருத்துவமனை மற்றும் இரண்டு பள்ளிகள் என ஒரு சிறுநகரத்திற்கு உண்டான எல்லா வசதிகளும் இதில் இருக்கும். இதுமட்டுமின்றி, நகரம் முழுவதும் எலக்ட்ரிக் கார்கள் ஓட வசதியாக பிரத்யேக பாதை ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. இப்பணிகள் அனைத்தும் இன்னும் 3 ஆண்டுகளில் முடிக்கப்பட்டு, 2020ஆம் ஆண்டு இந்த வன நகரம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Close