‘தமிழரை அழிக்க TIDயினர் களத்தில்’

“ஈழத்தமிழ் மக்களின் தொன்மங்கள் மீதும் அவர் தம் அடையாளங்கள் மீதும் குறிவைத்துத் தாக்கி, தமிழரை இனவழிப்புச் செய்கின்ற மூலோபாயத்தின் கருவிகளாக, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

கடந்த வாரம், கிளிநொச்சி நகரில் திறந்து வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை பொருத்தப்பட்டிருந்த பூகோள உருவில் பொறிக்கப்பட்டிருந்த “ஈழம்” எனும் சொல், பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரது எச்சரிக்கை காரணமாக நீக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், “கடந்த 2009இல், இனப்படுகொலையொன்றை திட்டமிட்ட முறையில் மேற்கொண்ட அரசாங்கம், போருக்குப் பின்னர் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை உலகம் அவதானிக்க வேண்டும்” என்றார்.

“தமிழர் சாம்ராஜ்ஜியம் நிலவியபோது, இலங்கைத் தேசத்தின் சிறப்புப் பெயர்களில் ஒன்றாக விளங்கிய “ஈழம்” என்ற சொல்லை நீக்குமாறு தமிழ்ச் சங்கத்துக்கும் அரச அதிகாரிகளுக்கும் கடுமையான எச்சரிக்கைகளையும் அழுத்தத்தையும் பயங்கரவாதப் பிரிவு விடுத்து அப்பெயரை நீக்கச் செய்துள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக, இனங்களுக்கிடையே ஒருபோதும் நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை என்ற செய்தி, துல்லியமாக வெளிப்பட்டுள்ளது” என, அவர் மேலும் கூறினார்.

Show More

Related Articles

Close