பேரறிவாளனின் கோரிக்கை நிராகரிப்பு

பெற்றோர்களுடன் சில நாட்கள் தங்கி இருக்க கோரி வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை தமிழக அரசும், சிறைத் துறையும் நிராகரித்துள்ளன.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதிகள் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோர் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு தண்டனையை அனுபவித்து வருகிறார்கள்.

இதனிடையே, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்டு கடந்த 16 மாதங்களாக படுத்த படுக்கையாக உள்ள தனது தந்தையை பார்க்க 30 நாட்கள் பரோலில் விட வேண்டும் என்று சிறைத் துறையினரிடம் பேரறிவாளன் மனு அளித்து இருந்தார்.

அவரின் 69 வயது தாயார் அற்புதம் அம்மாள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, பலமுறை சாலைகளில் மயக்கமடைந்து விழுந்திருக்கிறார்.

தனது மனுவில் பெற்றோர்களை கவனித்துக் கொள்ளயாரும் இல்லாத நிலையில், அவர்களின் மகனாக சிறிது காலம் பெற்றோரை கவனித்துக் கொள்ளும் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டு பேரறிவாளன் சிறை விடுப்பு கோரியிருந்தார்.

இந்நிலையில், பேரறிவாளன் கோரியிருந்த பரோல் விடுப்பை வழங்க தமிழக அரசு மறுத்து விட்டது. சிறை விடுப்புக் கோரிக்கையை நிராகரிப்பதற்காக ராஜீவ்காந்தி கொலை வழக்கு மத்திய அரசின் சட்டத்திற்கு உட்பட்டது என்று சிறைத்துறை, தமிழக அரசு சார்பில் காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Close