சம்பந்தர் – திருதராட்டிரன் விக்னேஸ்வரன் – வீஷ்மர்

இராமாயணத்தில் தசரதரும் அவர் மகன் இராமனும் ஒருவரோடு ஒருவர் அளவளாவிக் கதைத்ததான பதிவுகள் இல்லை எனலாம்.
அந்தளவுக்கு தந்தையும் மகனும் உயர் மரியாதை கொண்டிருந்தனர்.
இராமன் மீது தசரதன் தன் உயிரையே வைத்திருந்தார். இராமனோ தன் தந்தை மீது அளவற்ற மதிப்பும் பக்தியும் கொண்டிருந்தார்.
இத்துணை பற்றும் பாசமும் கொண்டிருந் தும் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கதைத்து உரையாடியதான பதிவுகள் மிகச் சொற்பம்.
இராமனுக்கு முடிசூட்டும் செய்தி கூட தசரதனால் மகனுக்குக் கூறப்பட்டதல்ல. இதே போன்று திருதராட்டினனும் பிதாமகர் வீஷ்மரும் ஒருவரை ஒருவர் அளவளாவிக் கதைத்ததான செய்திகளும் மிகக் குறைவு.
இதைச் சொல்வதற்குக் காரணம் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் அடிக்கடி கதைத்து நிலைமைகளை ஆராய வேண்டும்.
வட மாகாணத்தில் நடந்ததும் அதுதான். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் அடிக்கடி கதைத்திருந்தால் வட மாகாண முதலமைச்சருக்கு நடந்த சதித்திட்டமும் ஓரளவுக்கேனும் அம்பலத்துக்கு வந்திருக்கும்.
ஆனால் இருவரும் கதைக்காமலே அரசியல் செய்தனர்.
இவ்வாறு இருவரும் கதைக்காமல் இருப்பதை தமிழரசுக் கட்சியில் இருக்கக்கூடிய முக்கியஸ்தர்கள் சிலர் மிகக் கவனமாகப் பாதுகாத்துக் கொண்டனர்.
வடக்கின் முதலமைச்சர், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தருடன் கதைத்து நல்லுறவைப் பேணினால், வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியில் இருந்து விக்னேஸ்வரனைத் தூக்கி எறிவது கடினமான காரியம்.
இதைச் செய்யாவிட்டால் கொழும்பில் செய்த ஒப்பந்தத்துக்கு வில்லங்கமாகிவிடும் என்ற அடிப்படையில் சம்பந்தர் – விக்னேஸ்வரன் உறவைச் சிதைப்பதிலேயே தமிழரசுக் கட்சியின் முக்கிய புள்ளிகள் கவனம் செலுத் தினர்.
இதை நாம் சொல்லும் போது என்ன இருந் தாலும் சம்பந்தர் ஐயா இவற்றையெல்லாம் கவனித்திருக்க வேண்டும் என்று நீங்கள் முணுமுணுப்பதும் கேட்கிறது.
என் செய்வது? இரா.சம்பந்தர் அவர்கள் துரியோதனன் உள்ளிட்ட நூற்றொருவரின் தந்தையாகிய திருதராட்டிரனின் மனநிலையில் இருந்தால் நிலைமை இப்படித்தான் ஆகும்.
அட, சம்பந்தர் திருதராட்டிரனாக இருந்தால் தான் துரியோதனன், துச்சாதனன் மற்றும் இவர் தம் மாமன் சகுனி என எல்லோரும் சேர்ந்து தர்மத்தை அழிக்கத் தலைப்பட்டனர்.
அதுசரி சம்பந்தர் அவர்கள் திருதராட்டிரன் என்றால், முதலமைச்சர் விக்னேஸ்வரன்? என்றொரு கேள்வியைக் கேட்பீர்கள்.
அந்தக் கேள்விக்குப் பதில் அவர் பிதாமகர் வீஷ்மர். ஏன்? ஐயா அப்படிச் சொல்கிறீர்கள் என்றால்,
திருதராட்டிரன் மற்றும் துரியோதனன் தரப்பை விட்டு வெளியே வந்து தர்மத்தை நிலைநாட்டத் தயங்கியுள்ளாரல்லவா அது தான் அவரை வீஷ்மர் என்றோம்.
Show More

Related Articles

Close