அவளுக்கு தெரியாமலிருப்பது ஒன்றுமட்டுமே!!!

அவளுக்கு தெரியாமலிருப்பது ஒன்றுமட்டுமே!!!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அவளுக்கு…
பசிக்கு உணவு, தாகத்துக்கு தண்ணீர்,
சுவாசிக்க காத்து தேவை என தெரிந்திருக்கும்..
காணாமல் போனோர் போராட்டமென‌
எங்கு கேள்விப்பட்டாலும்
ஓடிப்போக தெரிந்திருக்கும்..
பதாகை தூக்கிப்பிடிக்க தெரிந்திருக்கும்…

பள்ளிக்கூடம் எண்டொண்டு இருப்பதும் அவளுக்கு தெரிந்திருக்கும்..
அவளொத்த‌ பிள்ளைகள் வெள்ளைச் சட்டையுடன்
அங்கு துள்ளித்திரிவதை கண்டிருக்க கூடும்..

அவளின் அம்மா விற்கும் க‌ச்சானை
அப்பாவின் தோழிலிருந்த படியே
ஒருசிறுமி வாங்கிப்போவதை
அடுப்பை ஊதிய படி இரசிக்க தெரிந்திருக்கும்..

ஆமி எண்டால் அப்பாக்களை புடிச்சுக்கொண்டு போகும்
எண்டு எல்லாம் தெரிஞ்சிருக்கும்..
ஆரெல்லாம் எப்பெப்பெ ஆராய் இருந்தவை எண்ட‌
அவளது வயதுக்கு மீறிய அரசியலும் அறிவாள்..

அப்பா என்ற ஒரு உறவு தனக்கும் இருப்பதை ஆணித்தரமாக‌ நம்பவும் தெரிந்திருக்கும்..
அப்பா திரும்பி வந்தால் தான் வாழப்போவது
பசியும், வறுமையும், புழுதியும், கண்ணீரும்
ஏக்கமும் கலந்த ஒரு தேசத்திலில்லை…‍;
அவையனைத்தையும் தாண்டி
எல்லாவுமாய் எனைக்காக்கும் என்அப்பா என்பக்கத்திலே எனும்
ஒற்றை உணர்வுடன் பறக்கப்போவது சொர்க்கத்திலெயே
எனவும் அவளுக்கு தெரிந்திருக்கிறது…

அப்பா படலையை திறந்து கொண்டு வரும்போது ஓடோடிச்சென்று
இரண்டு கால்களையும் கட்டிப்புடிச்சு…
அவர் தூக்கமுன்னமே தோழிலேறி காதைபுடிச்சு,
இந்தளவு நாளும் ஏனென்னை பாக்க வரேலை எண்டு
கேட்க வேண்டுமென அவளுக்கு ஆசைப்பட தெரிந்திருக்கிறது..

அனால்,
அப்பா எப்போது வருவார்
என்பது மட்டுமே இன்னும் தெரியாமல்
இதயத்துள் கனத்துக்கிடக்கிறது அவளுக்கு…

விபரன்

26/1/2017