யாழில் பாவனைக்குதவாத இறைச்சிகள் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து மீட்பு

யாழ்ப்பாண மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பண்ணையில் உள்ள மாட்டிறைச்சி கடையில் நீண்ட நாளாக சேகரித்து வைக்கப்பட்டிருந்த மனித பாவனைக்கு உதவாத 120 கிலோகிராம் நிறையுடைய இறைச்சி மற்றும் குடல்கள் சுகாதாரப் பகுதியினரால் நேற்று அதிரடியாகக் கைப்பற்றப்பட்டன.

கோழிக் கால்கள், மாட்டுக் கால்கள் கொண்ட கழிவுகளும் பல நாட்களாக வைத்திருந்த இறைச்சிகளுடன் காணப்பட்டமை சுகாதாரச் சீர்கேட்டை உணர்த்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

பண்ணையில் உள்ள மாட்டிறைச்சி கடையில் குளிர்சாதனப் பெட்டியில் மாதக்கணக்காக தேக்கி வைக்கப்பட்ட பாவனைக்கு உதவாத குடல், இறைச்சி என்பன பொலித்தீன் பைகளால் கட்டப்பட்டவாறு மீட்கப்பட்டன என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

ஆரம்பத்தில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை அவர்களது பணியைச் செய்யவிடாது இறைச்சி உரிமையாளர்கள் கத்திகளுடன் மிரட்டியுள்ளனர். பின்னர் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் பாவனைக்கு உதவாத இறைச்சிகள் தீயிட்டு அழிக்கப்பட்டன.