புலிகள் – கூட்டமைப்புக்குமிடையிலான உறவு பலமானது.

“தோற்கடிக்கப்பட்ட தரப்புடன் பேச்சு வார்த்தை நடத்துகின்றோம் என ஜனாதிபதி எண்ணிவிடக்கூடாது” என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சிக்கிளையின் வருட இறுதி ஒன்று கூடல், கட்சியின் செயலகமான அறிவகத்தில் சனிக்கிழமை  (31) நடைபெற்றது. கட்சியின் கிளிநொச்சிக் கிளைத்தலைவர் சி.சிறீதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கலந்து கொண்டு மாவை சேனாதிராஜா உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒன்றுபட்ட சக்தியாக இலட்சியத்தை வென்று எடுகின்ற பாதையில் மிக நீண்டகாலமாக நாங்கள் பயணிக்கின்றோம் இன்று எமது மக்களுக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றை பெறும் பொருட்டான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவை எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்திருக்கின்றது என்பது குறித்து எமக்கு ஆதங்கங்களும் கவலைகளும் உண்டு. ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புரிந்துணர்வின் அடிப்படையில் கொண்டிருந்த உறவு பலமானது.  அந்த பலம் தான் அப்போதைய  பேச்சுவார்த்தைகளில் தாக்கங்களை ஏற்படுத்தியது. இன்று  விடுதலைப்புலிகளுடைய பலம் இல்லாமல் நாங்கள் இருப்பதால் தோற்கடிக்கப்பட்ட தரப்புக்களுடன் பேசுகிறோம் என்ற எண்ணத்தில் அரசாங்கம் இருக்க முடியாது. இதனை ஜனாதிபதிக் நேரடியாக எடுத்துரைத்திருக்கிறோம்.

எங்களை சம தரப்பாக ஏற்று பிரச்சினைக்கு தீர்வுகாண முயலவேண்டும்.  இதனைத்தான் உலகம் அரசுக்கு சொல்லி இருக்கிறது. அரசும் அதனை ஏற்றுக்கொண்டு இருக்கிறது. மனித உரிமைக்குழுவில் ஏற்றுக்கொண்ட தீர்மானத்துக்க எதிராக அரசாங்கம் செயற்பட முடியாது விடுதலைப் புலிகளோடு ஏற்பட்ட பேச்சுவார்த்தைகளில் இராஜதந்திர அணுகுமுறை காணப்படவில்லை என்று குற்றம் சாட்டுகின்ற தரப்புக்கள்  எங்களுடைய முயற்சிகளுக்கும்  அத்தகைய  குற்றத்தை சுமத்த இடமளிக்க முடியாது.

நாங்கள்  ‘நம்ப நட நம்பி நடவாதே’ என்னும் பாணியில் பயணிக்க வேண்டி இருக்கிறது. தீர்வுக்கான முயற்சிகள் கலந்துரையாடல்களாகவும் ஆலோசனைகளாகவும் விவாதங்களாகவும் தான் இன்று வரை இருக்கிறது. இவை இன்னும் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை .

எங்களை தீர்வு முயற்சிகள் நோக்கி அழைத்துவந்துள்ள சர்வதேசம், குறிப்பாக இந்தியா,  சர்வதேச மனித உரிமைகள ஆணையகம் மேற்குலகு என்பன தங்களுடைய பங்களிப்பை  செய்ய வேண்டிய காலம் நெருங்கி வருகிறது. ஆட்சி மாறினாலும்   தமிழ் மக்களை கைவிட மாட்டோம் என்று அமெரிக்க இராஜங்க தரப்பு தெரிவிக்கிறது.

எங்களை தீர்வு முயற்சிகளில் இருந்து வெளியேறுமாறு மக்கள் எமக்கு ஆணைதரவில்லை   நாங்கள்  நிதானமாக சர்வதேச சமூகத்தோடு இணைந்து முயற்சிக்கிறோம் . முடியவில்லை என்றால் இலங்கை அரசாங்கம், தமிழ்மக்களை ஏமாற்றியது என்ற செய்தியினை சர்வதேச சமூகம்  அறிவிக்கின்ற நிலையை நாம் ஏற்படுத்துவோம் அதுவரை  வடக்கு, கிழக்கு இணைந்த வகையில் பல்லின சமூகங்களை அங்கிகரிக்கின்ற அரசியல் அமைப்பின் ஊடாகத்  தீர்வுப் பெறும் மக்களின் ஆணையை மதித்து நடப்போம்” என்றார்.

Show More

Related Articles

Close