ஐ.நாவின் புதிய ​செயலாளர் நாயகத்துக்கு சவாலான காலம்?

 

ஐக்கிய நாடுகளின் புதிய செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ், தனது பதவியை நேற்று (1) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். ஐந்து ஆண்டுகளுக்கு, அவர் பதவி வகிக்கவுள்ளார்.  

போர்த்துக்கல்லின் பிரதமராகவும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராகவும் பதவி வகித்த குட்டரெஸ், கடந்தாண்டு ஒக்டோபர் 13ஆம் திகதி, உத்தியோகபூர்வமாகத் தெரிவாகியிருந்ததோடு, டிசெம்பர் 12ஆம் திகதி, பதவியேற்றிருந்தார்.

இந்நிலையில், தனது முதலாவது உத்தியோகபூர்வ செய்தியில் அவர், இவ்வாண்டில் பூகோள அமைதி வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.

“நன்மதிப்பும் நம்பிக்கையும், முன்னேற்றமும் செழிப்பும் என, மனிதக் குடும்பமாக நாங்கள் வேண்டிநிற்கும் அனைத்தும், சமாதானத்திலேயே தங்கியுள்ளன. இன்றும் ஒவ்வொரு நாளும், சமாதானத்துக்காக அர்ப்பணிப்புடன் இருப்பதில் என்னுடன் இணையுமாறு, உங்களின் நான் கோரிக்கை விடுக்கிறேன். 2017ஆம் ஆண்டை, சமாதானத்தின் ஆண்டாக்குவோம்” என்று தெரிவித்தார்.

செயலாளர் நாயகத்தின் செய்தி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான ஐ.நா வதிவிட இணைப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதியுமாகிய உனா மக்கௌலீ, “சமாதானம் என்ற தலைப்பு, இலங்கைக்கு மிகவும் சம்பந்தமுள்ளது. ஏனெனில், நீண்டகாலத்துக்கானதும் நிலைத்திருக்கக்கூடியதுமான சமாதானத்துக்கான பாதையொன்றை உருவாக்குவதற்கான தனித்துவம் வாய்ந்த இடத்தில் காணப்படுகிறது. புத்தாண்டின் ஆரம்பத்தில், சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான பயணத்தில், இலங்கை மக்களுக்கு ஆதரவளிப்பதில், ஐக்கிய நாடுகள் அர்ப்பணிப்புடன் காணப்படுகிறது” என்று தெரிவித்தார்.

புதிய செயலாளர் நாயகத்தை வரவேற்ற வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர, ஐக்கிய நாடுகளுடன் இணைந்து இயங்குவதற்கு உறுதிப்பாட்டை வழங்கினார். அத்தோடு, சமாதானத்தை முன்னிறுத்துவதற்கான செயலாளர் நாயகத்தின் செய்தி, முழு உலக சமூகத்துக்கும் இலங்கைக்கும் பொருந்துகின்றமையையும் அவர் குறிப்பிட்டுக் கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையிலான தேசிய அரசாங்கம், நல்லிணக்கத்தின் பாதையின் முன்னேறி, நிலையான சமாதானத்தைப் பெறுவதற்கு அர்ப்பணிப்புடன் காணப்படுவதாகவும், அமைச்சர் மங்கள தெரிவித்தார்.

ஐக்கிய அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்துக்கு மத்தியில், புதிய செயலாளர் நாயகமும் பதவியேற்றிருக்கின்றமை, இலங்கை விவகாரத்திலும் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது.

இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுகளிலிருந்து இலங்கையை முழுமையாக விடுவிக்குமாறு, ஐ.அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப்புக்கு, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விசேட வேண்டுகோளொன்றை விடுத்திருந்தார். அந்த வேண்டுகோள், தமிழர் தரப்பாலும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

ஆனால், கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், இலங்கை தொடர்பான ஐ.அமெரிக்காவின் கொள்கை, குறிப்பிட்டளவு மாறுமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஜனாதிபதி சிறிசேனவின் வேண்டுகோளைத் தொடர்ந்து, இலங்கை தொடர்பான விவகாரங்களில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஐ.அமெரிக்காவுக்கு வருமாறு, ட்ரம்ப்பின் குழுவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தில், இலங்கை மீது, ஐக்கிய நாடுகளில் கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. குறிப்பாக, இறுதி யுத்தக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக, பல்வேறு மட்டங்களில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

தற்போது, இலங்கை மீது தளர்வான போக்கை, ட்ரம்ப்பின் நிர்வாகம் கடைப்பிடிக்குமாயின், புதிய செயலாளர் நாயகத்துக்குச் சவால்கள் அதிகமாகும். குறிப்பாக, இலங்கை விவகாரத்தை அப்படியே விடுவதற்கு, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் தயாராக இல்லை. எனவே, ஐ.அமெரிக்காவின் ஆதரவின்றி, இலங்கைக்கு எதிரான விடயங்களை முன்னெடுப்பதற்கு, புதிய செயலாளர் நாயகம், சவாலை எதிர்கொள்வார்.

எனவே, அடுத்த சில வாரங்கள், இலங்கையைப் பொறுத்தவரை முக்கியமானதாக அமையும். குறிப்பாக, பெப்ரவரி இறுதியில் ஆரம்பித்து மார்ச் இறுதி வரை இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில், இலங்கைக்கு எவ்வாறான அழுத்தங்கள் கிடைக்கப்பெறுமென்பது, விரைவில் தெரியவருமெனக் கருதப்படுகிறது.