இருட்டிலிருந்த தமிழர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர் தலைவர் பிரபாகரனே!

இருட்டிலிருந்த தமிழ் மக்களின் பிரச்சனைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர் தலைவர் பிரபாகரனே. அவர் மீது தமிழ் மக்களுக்கிருக்கும் மரியாதையை ஒருபோதும் இல்லாமலாக்கமுடியாது. அதன்காரணமாகவே விஜயகலா மகேஸ்வரனும் தலைவர் பிரபாகரன் தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்தார் என நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.

நவசம சமாஜக் கட்சி அலுவலத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைவர் பிரபாகரன் தொடர்பாக விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்துத் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நடவடிக்கை தொடர்பாக பல தமிழ் மக்களுக்கு இணக்கப்பாடு இல்லாவிட்டாலும், அவர் மீது ஒரு மரியாதை இருந்து வருகின்றது. தலைவர் பிரபாகரன் வடக்குக் கிழக்கு மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர். அதன்காரணமாக தமிழ் மக்கள் அவர் மீது கொண்டுள்ள மரியாதையை யாராலும் அழிக்கமுடியாது. அத்துடன் தமிழ் மக்கள் அவர்மீது மரியாதை வைத்திருப்பதால் எந்தப் பிரச்சனையும் எழுந்துவிடப்போவதில்லை.

பிரபாகரனை யாராவது புகழ்ந்து பேசினாலோ, உயர்த்திப் பேசினாலோ அவர்கள் பிரபாகரனின் வழியைப் பின்பற்றிச் செல்லப்போகின்றவர்கள் எனக் கருதமுடியாது. பொதுவாக எங்களுக்கு எதிர்க்கருத்துடையவர் மரணித்தால் அவருடைய கொள்கையை எதிர்த்தாலும் அவருடைய நல்லெண்ணங்களை வெளிப்படுத்துவது சாதாரண விடயம். அதனடிப்படையிலேயே விஜயகலா மகேஸ்வரனும் அவ்வாறு தெரிவித்தார்.

அண்மையில் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் தற்போதைய அரசாங்கத்தில் அவர் பிரமராகவோ அல்லது வேறொரு பதவியிலையோ இருந்திருப்பார் என விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருந்தார்.