மகிந்தவின் வெற்றிக்காக உழைத்தோம், ஆனால் பொறுத்த நேரத்தில் அவர் கைவிட்டுவிட்டார்!

2015ஆம் நடைபெற்ற தேர்தலின்போது மகிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக தாங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக பொதுபலசேனா அமைப்புத் தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் தன்னைத் தோற்கடிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடனும், சம்பிக்க ரணவக்கவுடனும் இணைந்து பொதுபலசேனா பணியாற்றியதாக முன்னைய ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த செய்தியாளர்களை நேற்று முன்தினம் சந்தித்துக் கலந்துரையாடியபோதே மகிந்தராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், சம்பிக்க ரணவக்கவே பொதுபலசேனாக் கட்சியை உருவாக்கியதாகவும், தன்னிடமிருந்து அன்னியப்படுத்துவதற்காகவே முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஷவின் இக்கருத்துத் தொடர்பாக பி.பி.சி. சந்தேசியாவுக்கு செய்தி வழங்கிய பொதுபலசேனா கட்சியின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே,

மகிந்த ராஜபக்ஷவுடன் தொடர்பு வைத்திருக்கும் அனைவருக்கும் தெரியும், எமது அமைப்பானது அவருக்குத்தான் ஆதரவளித்து வந்தது.

துரதிஷ்டவசமாக அவர் தற்போது தன்னைச் சுற்றியிருப்பவர்களின் ஆலோசனைக்கமைய வேறு விதமாகப் பேசுகின்றார்.

மகிந்த ராஜபக்ஷ கூறியதுபோல், பொதுபல சேனா அமைப்பானது ராஜிதவுடனோ, சம்பிக்கவுடனோ எந்தவொரு தொடர்பையும் கொண்டிருக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.