அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா புஷ்பா கணவர் மீது தாக்குதல்

அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா புஷ்பா ஆதரவாளர்களுக்கும் அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர் தாக்கப்பட்டதால், அவர் காயமடைந்தார்.

ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு புதன்கிழமை சசிகலா புஷ்பா எம்.பி. வருவதாக தகவல் பரவியது. இதனால் அங்கு பதற்றம் ஏற்படாமல் தவிர்க்க போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகர் வந்தார்.

வியாழக்கிழமை அதிமுக பொதுக்குழு கூட உள்ள நிலையில், லிங்கேஸ்வர் ஒரு ஆவணத்தை கொடுக்க வந்திருப்பதை அறிந்த அதிமுகவினருக்கும், சசிகலா புஷ்பா கணவர் லிங்கேஸ்வர் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதற்குப் பிறகு அது மோதலாக மாறியது. கட்சியினருக்குள் ஏற்பட்ட கைகலப்பில் லிங்கேஸ்வர திலகர் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.