மார்க் உருவாக்கிய புதிய AI உதவியாளன் ஜார்விஸ்!

 

முன்னணி சமூகவலைத்தளமான முகப்புத்தகத்தின்(Face Book) நிறுவனர் மார்க் சூக்கர்பேர்க் (Mark Zuckerberg) பற்றி இன்று மூலைமுடுக்கெல்லாம் தெரியும் . உலகின் பணக்காரனும் உலகமக்களின் நாடித்துடிப்பை எல்லாம் தன்வசம் வைத்திருக்கும் மார்க் தனது வீட்டுப்பணிகளில் உதவிசெய்வதற்காக செயற்கை அறிவு உதவியாளனாக (AI Assistant) தொழிற்படும் மென்பொருளை தானே உருவாக்கி வெற்றி கண்டுள்ளார்.


அவர் உருவாக்கிய மென்பொருளுக்கு ”ஜார்விஸ்” (Jarvis) பெயரிட்டுள்ளார். கொலிவுட்டின் ரொபர்ட் டவுனி ஜூனியர் நடித்த ‘Iron Man’ படத்தில் அவருக்கு உதவியாளராக வரும் ரோபோவுக்கு பெயர் ‘ஜார்விஸ்’ ஆகும் அதனையே தனது மென்பொருள் உதவியாளருக்கும் பெயரிட்டுள்ளார். இரும்பு மனிதன் படத்தில் ரொபர்ட் டௌனியை அடுத்து ரசிகர்களைக் கவர்ந்த பாத்திரம் அவரது வீட்டில் உதவியாக இருக்கும் செயற்கை அறிவு கொண்ட ஜார்விஸ் ரோபோ தான். அந்த அளவுக்கு ரொபர்ட்டௌனிக்கு உதவியாக அனைத்து வேலைகளையும் ஜார்விஸ் சிறப்பாக செய்திருக்கும். அந்த கனவுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் மார்க்.

இது ஒன்றும் இயந்திர ரோபோ இல்லை. சேவரில் இருந்து இயங்கும் மென்பொருள். இதனை அவர் தனது ”ஐபோன்” இல் உள்ள ”அப்ஸ்” ஊடாக இயக்குவார் . வீட்டிலுள்ள பொருட்களுக்கு இணைய இணைப்பினைக் கொடுத்து அதனை ஜார்விஸின் சேவருடன் இணைத்துள்ள மார்க், கைத்தொலைபேசி, குரல் கட்டளைகள் மூலம் வீட்டிலுள்ள அனைத்து பொருட்களையும் இயக்கிக் காண்பித்துள்ளார். குரல் மூலம் கட்டையிடுவது (Voice Command) மட்டுமல்லாது, முகம் மூலம் அடையாளம் காணும் முறை (Face Scanning Identification) உள்ளிட்ட பல்வேறு செயற்கை அறிவு முறைகளை தனது மென்பொருளுக்கு பயிற்றுவித்துள்ளார். முகப்புத்தகத்தில் தற்போது பயன்படுத்தும் சகல உதிரிகளையும் (Tools)இந்த மென்பொருளில் சேர்த்துள்ளார்.

தன் வீட்டிலுள்ள விளக்குகள், தட்பவெட்பம், இசை போன்றவற்றை தன் குரல் மூலமே கட்டுப்படுத்த, அந்த செயற்கை நுண்ணறிவு உதவியாளருக்கு கற்றுக்கொடுத்திருக்கின்றார். தன் மகள் மக்ஸ் இருக்கும் அறையில், ஏதாவது வித்தியாசமாக நடந்தால், உடனே தனக்கு தெரிவிக்கவும் கற்றுக்கொடுத்திருக்கின்றார். மேலும், தன் வீடு தேடி வரும் நபர்களின் முகத்தை அடையாளம் காணவும், அதற்கு கற்றுக்கொடுத்திருக்கின்றார்

இது பற்றி ஆரம்பத்தில் அவர் தெரிவித்திருக்கையில் ”நான் முகாமைத்துவம் செய்யும் பல நிறுவனங்களின் புள்ளிவிவரங்களை, மெய்நிகர் (Virtual Reality) தொழில்நுட்ப வடிவில் என் முன்னே காட்டவும், நிறுவனங்களை திறம்பட நிர்வகிப்பதில் எனக்கு உதவவும், அந்த உதவியாளரை பயன்படுத்துவேன்’ என, மார்க், தன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

மைக்ரோசாப்ட்டின் மெய்நிகர் தொழில்நுட்பமான, ‘ஹோலோலென்ஸ்;’ அமேசனின் செயற்கை நுண்ணறிவு சாதனமான ‘எக்கோ’ போன்றவை, தன் தேவைக்கு பொருந்தாது என, மார்க் சொல்லியிருக்கிறார்.

இந்த வகையான மென்பொருளை இவ்வாண்டு இறுதிக்குள் உருவாக்கப்பபோவதாக 2016 சனவரியில் அறிவித்திருந்தார். சொன்னதை சாதித்துக்காட்டியுள்ளார். இதற்காக நுாற்றுக்கணக்காண மணித்தியாலங்களை செலவழித்திருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். இந்த மென்பொருளை தானே வடிவமைத்திருக்கின்றமை மற்றொரு சிறப்பாகும்.நான் நினைத்ததைவிட அதை உருவாக்குவது சுலபமாகவே இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாகவே FaceBook நிறுவனத்தில் இணைபவர்களுக்கு அவர்கள் எந்த துறையானவர்களாக இருந்தாலும் முதல் ஆறுவாரங்களுக்கு மென்பொருள் எழுதும் பயிற்சி வழங்கப்படும். ஆனால் 2006 இல் அந்நிறுவனத்தை உருவாக்கிய 32 வயதான மார்க் இந்த பயிற்சிகள் இன்றி முகப்புத்தகத்தின் பெருமளவான கணினி ஆணைகளுக்கு( Coding) களின் சொந்தக்காரராக இருக்கின்றார்.

எவ்வளவோ புறோகிராமர்களை தன்னகத்தே கொண்டிருக்கும் மார்க்  தான் எழுதும் Coding களின் பிழைகளை வேறு ஒருவர் திருத்துவதற்கு விடாமல் தானே கையாளுகின்றார். தான் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அலுவலராக மட்டும் தொழிற்படாமல் மென்பொருள் வடிவமைப்பில் கூடிய நேரத்தை செலவிடுகின்றார். அதனை தனது பழக்கமாக கொண்டிருக்கின்றார்.

மார்க் நிறுவனத்தின் தலைவராக மட்டுமல்லாது சிறந்த குடும்பத்தலைவனாகவும் சிறந்த அப்பாவாகவும் தொழிற்படுவதற்கு இந்த ஜார்விஸ் அவருக்கு தேவைப்படுவதாக உணர்ந்திருக்கின்றார்.

ஓரளவுக்கு தானியங்கி முறையில் தொழிற்படும் தொழில்நுட்பங்களை உள்வாங்கிய வீட்டினை உலகின் பணக்காரனும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிறுவனருமான பில்கேற்ஸ் ஏற்கனவே தனக்காக அமைத்திருக்கின்றார். ஆனால் அவற்றை எல்லாம் விட வித்தியாசமானதாக மார்க் சிந்திக்கின்றார்.

மார்க்கின் குடும்ப உதவியாளராக இருக்கும் ஜார்விஸ் விரைவில் எங்கள் குடும்பத்திலும்  உதவியாளராக மாறி விடும் சந்தர்ப்பத்தை எதிர்பார்க்கலாம். நாம் அனைவரும் ஜார்விஸ் மென்பொருளை நிறுவி எங்கள் வீட்டு பொருட்களுடன் இணைத்து கட்டளைகளை வழங்கும் காலம் வெகுதுாரத்தில் இல்லை. எம்நாடித்துடிப்பை அறிந்த மார்க் விரைவில் எங்கள் அன்றாட வீட்டுப்பணிகள் குறித்தும் அவதானிக்க ஆயத்தமாகின்றார் போலும். எது எப்படியோ ஜார்விஸ் விரைவில் நமக்கும் நண்பனாவான்.

Show More

Related Articles

Close