சிறுபான்மை இனத்தின் உரிமைகளை ஆட்சியாளர்கள் தீர்மானிக்கக் கூடாது

சிறுபான்மையின மக்கள் பாதுகாக்கப்படுவர் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
சிறுபான்மை இன மக்கள் பாதுகாக்கப்படுவர் என்று இந்த நாட்டின் பிரதமர் கூறுவதற்குள் பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனத்துக்கு எப்போதும் ஆபத்தானதாக உள்ளது என்ற உண்மை மறைமுகமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
சிறுபான்மை இன மக்கள் பாதுகாக்கப்படுவர் என்று பிரதமர் கூறுகின்ற போது யாரிடம் இருந்து பாதுகாக்கப்படுவர் என்ற கேள்வி எழும்.
இந்தக் கேள்விக்கு பெரும்பான்மை இனத்திடம் இருந்து என்பது பதிலாக அமையும். அந்த வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறிய கருத்தில் ஓர் உண்மை உள்ளடங்கியுள்ளது.
மாறாக சிறுபான்மை இன மக்கள் பாதுகாக்கப்படுவர் என்ற கருத்துரைக்குள் இரண்டு ஐய வினா எழுகிறது. அதாவது இந்த நல்லாட்சியில் சிறுபான்மை இன மக்கள் பாதுகாக்கப்படுவரா? அல்லது சிறுபான்மை இன மக்களை பாதுகாக்கும் வகையில் அரசியலமைப்புச் சீர்திருத்தமும் சிறுபான்மை இனத்தின் உரிமையை முழுமையாக வழங்குவதன் மூலமும் சிறுபான்மை இன மக்கள் பாதுகாக்கப்படுவரா? என்பதே அந்த இரு ஐய வினாவாகும்.
நல்லாட்சியில் சிறுபான்மை இன மக்கள் பாதுகாக்கப்படுவர் என்பதே பிரதமர் கூறிய கருத்துரையின் உட்பொருள் என்றால், அடுத்த ஆட்சி வேறொன்றாயின் சிறுபான்மை இனத்தின் கதை கந்தலாகி விடும்.
ஆக, நல்லாட்சியில் மட்டுமே சிறுபான்மை இன மக்கள் பாதுகாக்கப்படுவதாக இருந்தால் அந்தப் பாதுகாப்பு அர்த்தமற்றது என்பதுடன் எதிர்காலத்தில் பேராபத்துக்களையும் சந்திக்க நேரிடும்.
மாறாக சிறுபான்மை இன மக்கள் எந்தக் காலத்திலும் எப்போதும் பாதுகாக்கப்படுவர் என்பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்துரை அமையுமாயின் உண்மையில் அது வரவேற்கத்தக்கதாக இருக்கும்.
பொதுவில் ஒரு நாடு என்றால் அங்கு சகல இன மக்களும் சகல உரிமைகளும் பெற்று வாழ்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இருந்தும் இலங்கையில் அப்படியான நிலைமை அறவே இல்லை எனலாம்.
பெரும்பான்மை இனமாகிய சிங்கள மக்களும் ஆட்சியாளர்களும் இந்த நாடு தமக்கு மட்டுமே சொந்தம் என்கின்றனர்.
இந்த உரிமை பாராட்டும் விடயத்தோடு இனப்பாகுபாடு மிகச்கச்சிதமாக பேணப்பட்டு வருவதுடன் தேர்தல் காலங்களில் இனவாதம் மேலெழுந்து ஆட்சி யாளர்களைத் தெரிவு செய்கிறது.
இதனால் இந்த நாட்டின் சிறுபான்மை இனமான தமிழ் மக்கள் பட்ட துன்பங்கள், அனுபவித்த இழப்பின் வலிகள் கொஞ்சமல்ல.
இன்றுவரை இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயம் காலம் கடத்தப்படுகிறதேயன்றி ஆக்க பூர்வமானதாக எதுவும் நடக்கவில்லை. நடக்கிறது என்று சொல்லப்படுவதிலும் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது.
எனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறிய சிறு பான்மை இன மக்கள் பாதுகாக்கப்படுவர் என்பது எக்காலத்திலும் பாதுகாக்கப்படுவதாக இருக்க வேண்டும்.
நல்லாட்சியில் பாதுகாப்பு அடுத்த ஆட்சியில் வெட்டிப் புதைப்பு என்பதாக நிலைமை இருந்தால் வேள்வி ஆடுகளின் கதிதான் தமிழினத்துக்குரியதாகிவிடும்.
எனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுகின்ற சிறுபான்மை இன மக்களுக்கான பாதுகாப்பு என்பது அந்த மக்களுக்கு வழங்கப்படுகின்ற உரிமை அதிகாரம் என்பவற்றிலேயே தங்கியுள்ளது.
இவற்றை வழங்காமல் – வழங்க முயற்சிக்காமல் சிறுபான்மையினம் பாதுகாக்கப்படும் என்று வெறு மையாக கூறுவது காலம் கடத்தும் ஒரு செயற்பாடாக அமையுமேயன்றி வேறில்லை எனலாம்.
Show More

Related Articles

Close