சிறுமிகளின் மரணம் தொடா்பில் ஊடகங்களில் தவறான செய்திகள்

கிளிநொச்சி ஆனைவிழுந்தான்குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் மரணம் தொடர்பாக  சில ஊடகங்களில்  வெளியான தவறான செய்திகள் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் கிராம பொது அமைப்புகளும் கவலைத் தெரிவித்துள்ளன.

கடந்த 07.12.2016ந் திகதி மாலை 3.00 மணியளவில் குறித்த நான்கு சிறுமிகள் குளத்திற்குச் சென்றனர். குளத்திலுள்ள கட்டுமரத்தில் முதல் இரு சிறுமிகளையும் குளத்தின் நடுப்பகுதிக்கு அழைத்து சென்று குளத்தினை காட்டிய பின்னர் கரைக்குத் திரும்பி , சிறுமிகளை இறக்கிவிட்ட பின்னர் மற்றைய இரு சிறுமிகளையும் கட்டுமரத்தில் ஏற்றி குளத்தின் நடுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த போது ஏற்கனவே கரையில் இறக்கி விடப்பட்டிருந்த இரு சிறுமிகளும் ஏற்கனவே உடைப்பெடுத்து இருந்த குளத்தின் அணைக்கட்டுப் பகுதியின் ஆழமான பகுதிக்குச் சென்ற போது தவறுதலாக அக்குழிக்குள் வீழ்ந்தே உயிரிழந்தனர்.

திருமதி.தர்சினி கஜேந்திரன் வயது 17, இரகுநாதன் பிரியா வயது 16 ஆகிய இரு சகோதரிகளே உயிரிழந்தனர்;. திருமதி.தர்சினி கஜேந்திரன் இருமாதங்களுக்கு முன்னரே திருமணமானவர். கணவர் கஜேந்திரனே குளத்தினைக் காட்ட கட்டுமரத்தில் அழைத்துச் சென்றவர். பொலிஸ் விசாரணையிலும் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் நடைபெற்ற மரண விசாரணையிலும் இத்தகவலே தெரிவிக்கப்பட்டு சடலங்கள் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டன.

இந்நிலையில் ஊடகங்களில் இம்மரணத்தில் சந்தேகம் உருவாகி இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பாக பெற்றோரினாலும் கிராம பொது அமைப்புகளினாலும் கவலைத் தெரிவிக்கப்படுகின்றன. பொறுப்பற்ற விதத்தில் சம்பவத்தினை ஆராயாமல் வெளியிடப்பட்டுள்ள செய்தி தொடர்பாகவும் ஆழ்ந்த கவலையினைத் தெரிவித்துள்ள பெற்றோர் தமது பெண்பிள்ளைகளின் உயிரிழப்புத் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி தொடர்பாக பொறுப்புக் கூற வேண்டியவர்கள் பொறுப்புக் கூறுதல் மூலமே ஊடகத் தர்மம் காக்கப்படும் என தெரிவிக்கின்றனர்.