இராவணனின் சரித்திரம்

ramayana-yuddha-kanda-1வசியம் இல்லாது இறைவன் அவதாரம் எடுப்பதில்லை. பல சீவராசிகளின் தொடர் செயல்கள் அனைவரையும் பாதிக்கும் வேளையில், அவர்களது ஈடுபாட்டினால் மட்டுமே திருத்தி அமைக்க முடியாததோர் அதர்மச் சூழ்நிலை நிலவ வேண்டும். அங்குதான் இறைவன் நேரடியாகத் தலையெடுக்க வேண்டியிருக்கிறது. ராவணனது கொடுஞ்செயல்கள் அவ்வாறான சூழ்நிலை ஒன்றை ஏற்படுத்தி, ராமாவதாரத்திற்கு ஒரு மூல காரணமாக அமைந்தது. அதனால் ராவணனின் பிறப்பையும், அவனது செயல்களையும் ஆராய வேண்டிய காரணம் உருவாகிறது.

இராவணனின் தோற்றத்திற்கு வெகு காலம் முன்பாகவே, மகாவிஷ்ணு உறையும் ஸ்ரீ வைகுண்டத்தின் வாயில் காப்போர்களாக ஜய மற்றும் விஜய என்னும் பெயர் கொண்ட (கடந்த மற்றும் தற்போதைய தமிழ் ஆண்டின் பெயர்களும் அவைகளே!) இருவர் பணியாற்றினார்கள். ஒரு முறை சனகாதி முனிவர்கள் எனப்படும் தேவ ரிஷிகளான சனகர், சனாதனர், சனத்குமாரர் மற்றும் சனந்தனர் என்ற நால்வரும் மகாவிஷ்ணுவைத் தரிசிக்க வைகுண்டம் வந்தனர். (ஆலமரத்தடியில் தக்ஷிணாமூர்த்தியின் காலடியில் எப்போதும் வீற்றிருந்து “நான்மறை, ஆறு அங்கம் கற்கும்” நான்கு முனிவர்கள்தான் அவர்கள்.) அவ்வாறான பழம்பெரும் முனிவர்கள் என்றாலும், தாங்கள் செய்திருந்த மாபெரும் தவத்தின் விளைவாகப் பார்ப்பதற்கு இளைஞர்கள் போல அவர்கள் தெரிந்தனர். அதனால் அவர்களை ஏதோ விளையாட்டிற்காக வந்துள்ள இளம் வயது வாலிபர்கள் என்றெண்ணி, அவர்கள் திருமாலைத் தரிசிப்பதற்கு ஜெயனும், விஜயனும் அனுமதி அளிக்காது மறுத்து விட்டனர். அதனால் கோபம் கொண்ட முனிவர்கள் தங்கள் தவ வலிமையால் அவர்கள் இருவரையும் இனி வரும் மூன்று ஜென்மங்களுக்கு அரக்கர்களாகப் பிறப்பீர்கள் என்று சாபம் கொடுத்துவிட்டார்கள். தங்களது தவறை உணர்ந்து ஜெய-விஜயர்கள் உடனே முனிவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவே, முனிவர்களும் அவர்கள் மேல் கருணைகொண்டு, அந்த மூன்று ஜென்மங்களின் முடிவில் சாப விமோசனம் அடைந்து இறைவனின் அருளால் இருவரும் தங்களது சுய உருவத்தை மீண்டும் பெறுவதோடு அவரவர்கள் பணிக்கும் திரும்புவார்கள் என்று கூறினார்கள்.

அதன்படி மூன்று ஜென்மங்களில் ஜயன் ஹிரண்யகசிபு, ராவணன் மற்றும் சிசுபாலனாகவும், விஜயன் ஹிரண்யாக்ஷகன், கும்பகர்ணன் மற்றும் தந்தவக்ரனாகவும் பிறக்கிறார்கள். இவ்வாறான அவர்களது ஒவ்வொரு பிறவிகளிலும் எண்ணற்ற, நீதிக்குப் புறம்பான பல கொடுஞ்செயல்களை அவர்கள் புரிந்ததால் மகாவிஷ்ணு வெவ்வேறு அவதாரங்களை எடுத்து அவர்களை அழிக்கவேண்டி வருகிறது. வராக அவதாரத்தில் ஹிரண்யாக்ஷகனும், நரசிம்ஹ அவதாரத்தில் ஹிரண்யகசிபுவும் மாய்கிறார்கள். இராம அவதாரத்தில் ராவணனும், கும்பகர்ணனும் அவரது கையாலேயே கொல்லப்படுகிறார்கள். இறுதியாகச் சிசுபாலனும், தந்தவக்ரனும் ஸ்ரீ கிருஷ்ணரால் இறக்கிறார்கள். முனிவர்கள் முன்பு கூறியபடியே, ஸ்ரீ கிருஷ்ணரின் சக்ராயுதத்தால் உயிர் துறக்கும் சிசுபாலன் மற்றும், தந்தவக்ரனின் ஆன்மாக்கள் அடுத்த கணமே பரமாத்மாவுடன் கலந்து பாவ விமோசனம் பெறுகின்றன. இவ்வாறு அவர்கள் இருவரும் மோக்ஷம் அடைவதை யுதிஷ்டிரனும் மற்றவர்களும் ஆச்சரியத்துடன் நேரில் கண்டு அதிசயிக்கின்றனர். இந்த விவரங்கள் எல்லாம் ஸ்ரீமத் பாகவதத்தின் ஏழாவது ஸ்கந்தம், முதலாவது அத்தியாயத்தில் கூறப்பட்டிருக்கின்றன.

இப்போது நாம் ராவணனின் கதையைப் பார்ப்போம். புலஸ்தியன் என்றதொரு பிராம்மண ரிஷியும், அவரது மகனும் பிரும்ம ரிஷியுமான விஸ்ரவன் என்றும் இருவர் இருந்தனர். விஸ்ரவனுக்கு வைஸ்ரவணன் என்று பெயர் கொண்ட மகன் ஒருவன் பிறந்தான். குபேரன் என்றும் பெயர் கொண்ட அவனே செல்வங்கள் எல்லாவற்றுக்கும் அதிபதியாக வணங்கப்படுகிறான். பின்னாளில் மனைவியை இழந்த விஸ்ரவனை கைகசி என்னும் அரக்கி மயக்கி, அவன் மூலம் நான்கு குழந்தைகளைப் பெற்றாள். விஸ்ரவனை அசுபமான வேளையில் அவள் விரும்பியதால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அசுர குணங்களுடனும், தோற்றத்துடனும் இருப்பார்கள் என்று விஸ்ரவன் அவளிடம் கூறினான். இராவணன், கும்பகர்ணன் மற்றும் சூர்ப்பனகை மூவரும் அவ்வாறே அவர்களுக்குப் பிறந்தவர்கள். நல்ல குணங்களுடனும், நேர்மை ஒழுக்கம் மிகுந்தவனாகவும் ஒரு பிள்ளையாவது வேண்டும் என்று கைகசி விஸ்ரவனிடம் வேண்டிக்கொள்ள அவ்வாறு பிறந்தவன்தான் விபீஷணன். இந்த உறவு முறையால் ராவணன் குபேரனுக்கு மாற்றாந்தாய் வழி வந்த தம்பி ஆகிறான்.

அரக்கர்களின் தலைவனான சுமாலியின் மகள்தான் கைகசி. தந்தை சுமாலியின் தூண்டலில்தான் கைகசி விஸ்ரவனைக் கணவனாக வரித்துக்கொண்டாள். குபேரனிடம் வஞ்சம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே சுமாலியின் எண்ணம். முன்பு சுமாலிக்கு மால்யவன் என்ற அண்ணனும், மாலி என்கிற தம்பியுமாக இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். இந்த மூன்று சகோதரர்களும் இலங்கையை ஆண்டுகொண்டு வளமாகவும் வாழ்ந்துகொண்டு இருந்தனர். ஆட்சி செய்கிறோம் என்ற ஆணவத்தில் அவர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். அதனால் தேவர்களுக்கும் அரக்கர்களுக்கும் இடையே பெரிய போர் ஒன்று நடந்தது. தேவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி மஹாவிஷ்ணுவே போரில் இறங்கி, அரக்கர்களைத் தோற்கடித்து ஆட்சியை அவர்களிடம் இருந்து கைப்பற்றி, குபேரனை அரசனாக்கி இலங்கையை ஆளவைத்தார். அந்தப் போரில் சுமாலியின் தம்பி மாலி இறந்து போனான். வசதியான இடத்தையும், ஆட்சி பீடத்தையும் இழந்த அரக்கர்கள் தங்குவதற்கு இடம் இல்லாமல் இங்குமங்குமாக அலைந்துகொண்டு, தேவர்களிடம் வஞ்சம் தீர்த்துக்கொள்ள சரியான சந்தர்ப்பம் ஒன்றைத் தேடிக்கொண்டு இருந்தனர். அந்த நிலையில்தான் சுமாலி விஸ்ரவனை கைகசியின் வலையில் மாட்டிக்கொள்ள வழி வகுத்தான்.

சுமாலியின் திட்டம் அவ்வாறு இருந்ததால், குபேரன் அளவிற்கு அவர்கள் உயரவேண்டும் என்ற ஆசையால் உந்தப்பட்ட கைகசி தனது மூன்று மகன்களையும் தீவிரமாகத் தவம் செய்து வலிமை பெறுவதற்கு வற்புறுத்தினாள். அவர்களும் வெகு காலத்திற்குத் தவம் செய்து வந்தார்கள். அதன் இறுதிக் கட்டத்தில் பிரம்மா அவர்கள் முன்பு தோன்றி அவர்களுக்கு வேண்டிய வரங்களைக் கேட்கச் சொன்னார். கடவுள், தேவர்கள், மற்றும் அரக்கர்கள் எவராலும் தனக்கு இன்னலோ, முடிவோ வரக்கூடாது என்று ராவணன் வேண்டி நின்றான். மாந்தர்களாலும், விலங்குகளாலும் தனக்குப் பிரச்சினை ஏதும் வரமுடியாது என்ற அவனது இறுமாப்பின் மூலம் விளைந்த எண்ணத்தால் அவர்களை அவன் அந்த சாகாவரப் பட்டியலில் இருந்து விலக்கி வைத்தான். அவனாலேயே ஏற்பட்ட இந்த விதிவிலக்கினைப் பின்பு விஷ்ணுவும், தேவர்களும் சரியான சந்தர்ப்பத்தில் பயன்படுத்தி அவனது அழிவிற்கு வழி கண்டனர்.

கும்பகர்ணன் வரம் கேட்கப் போகும் சமயம், ஏற்கனவே அவனால் மிகவும் அவதியுற்ற கடவுளும், தேவர்களும் அவன் என்ன வரன் கேட்டு எப்படித் தொந்திரவு செய்வானோ என்ற அச்சத்தில் இருந்தனர். அதனால் பிரம்மனின் வேண்டுகோளின்படி சரஸ்வதி தேவி அவனது நாவில் புகுந்து அவன் கேட்கப்போவதைத் திசை மாற்றும்படி செய்தாள். அதன்படி அவனும் தான் தூங்கச் சென்றால் தனது தூக்கம் நீண்ட காலம் நீடிக்கவேண்டும் என்ற வரத்தை வேண்டினான்.

விபீஷணனோ, அவனது இயல்பான தன்மைப்படி, தனது உயிருக்கே ஆபத்து வரும் என்றால் கூட தான் என்றும் நீதி, நேர்மை தவறாது தர்மத்தின் பக்கமே நிற்க வேண்டும் என்ற வரத்தை வேண்டினான். இவ்வாறாக ஒவ்வொருவரும் தாங்கள் வேண்டியதைக் கேட்டுப் பெற்றார்கள்.

Show More

Related Articles

Leave a Reply

Close