தமிழ்பேசும் மக்களிடையே ஒற்றுமை இல்லாவிடின் ‘கிழக்கு பறிபோகும்’

iraasambanthan

“அரசியல் தீர்வைக்காண, நாம் முயல்கிறோம். பிரச்சினைகளைத் தீர்க்க, நிறைவேற்று அதிகாரங்கள் எமது கைகளுக்குக் கிடைக்கவேண்டும். அதைப் பெறவே, அரசியல் தீர்வு சம்பந்தமான ஆக்கபூர்வமான பேச்சுக்களில் நாம் ஈடுபடுகிறோம். அதிகாரங்கள் இருந்தாலேயே பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் கிட்டும்” என, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான
இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

“வடக்கு, கிழக்கில், தமிழ் பேசும் மக்கள் ஆட்சிபுரிய வேண்டும். ஒற்றுமை இல்லாவிடின், கிழக்கு மாகாணம் விரைவில் பறிபோகும்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“வடக்கு முஸ்லிம்களுக்கும் தீர்வு அவசியம்” எனும் கருப்பொருளில், வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 26ஆவது ஆண்டு நிறைவின் நினைவாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) நடத்தப்பட்ட விசேட சந்திப்பில், விசேட விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், மேலும் கூறியதாவது, “யாரால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனரோ, அவர்களால், தமிழர்களும் வெளியேற்றப்பட்டனர். அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கும் எல்.ரீ.ரீ.ஈ அமைப்புக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம், 1995ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் திகதி முடிவுக்கு வந்தது. அப்போது, குடாநாட்டிலிருந்த தமிழர்கள், வன்னிக்கு வெளியேற்றப்பட்டனர். இதேபோன்று, யுத்தத்தின் போதும், வடக்கின் ஏனைய மாவட்டங்களிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

தமிழர்களும் திருப்தியற்ற நிலையிலேயே வாழ்கின்றனர். வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில், வடக்கு முதலமைச்சருடனும் புனர்வாழ்வு அமைச்சருடனும் கலந்துரையாடி, ஒழுங்குகளை மேற்கொள்ளவேண்டும்.

ராஜபக்ஷவின் ஆட்சியிலும் தற்போதைய ஆட்சியிலும், ஐந்து – ஆறு முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தும் ஏன், பல விடயங்களைச் செய்ய முடியாதுள்ளது. இதற்குத்தான், ஆட்சியதிகார முறை மாற்றப்பட்டு, சமஷ்டி முறை வரவேண்டும் என, தந்தை செல்வா, 70 ஆண்டுகளுக்கு முன்னரே கூறினார்.

நாம், சாத்வீக ரீதியாக அரசியல் ரீதியாக, ஜனநாயக ரீதியாக, ஆயுத ரீதியாகப் போராடினோம். தற்போது, இராஜதந்திர ரீதியாகப் போராடுகிறோம். இந்தப் போராட்டங்களில் முஸ்லிம் தலைவர்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது.

முஸ்லிம்களை நாங்கள் குறைகூறவில்லை. அவர்கள், வடக்கு, கிழக்கிலும், நாட்டின் எப்பாகத்திலும் வாழ உரித்துடையவர்கள். எனினும், முஸ்லிம் தலைவர்கள், போராட்டங்களுக்கு ஒத்துழைப்புத் தரவில்லை.

ஜெனீவாத் தீர்மானங்கள் காரணமாக, இலங்கை அரசுக்கு அழுத்தங்கள் காணப்பட்டன. 2012ஆம் ஆண்டு தீர்மானத்துக்கு நாங்கள் உழைத்துக்கொண்டிருக்க, ராஜபக்ஷவுக்கு ஆதரவான முஸ்லிம் தலைமைகள், எங்களுக்கு எதிராகப் பிரசாரம் செய்தனர்.

வடக்கிலும் கிழக்கிலும், தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாகச் செயற்படவேண்டும். வடக்கு, கிழக்கில் தமிழ் மொழி முக்கியமான மொழியாக இருக்கவேண்டும். இந்தத் தீவில், அங்கிகரிக்கப்பட்ட மொழியாக தமிழ் மொழி இருக்க வேண்டும். இதைச் சிங்களத் தலைவர்களும் ஏற்றுள்ளனர்.

தமிழ்பேசும் பிராந்தியம், தமிழ் பேசும் பிராந்தியமாகவே தொடர வேண்டும். மதம், மொழி, கலாசாரம், பண்பாடுக்கு முன்னுரிமை வேண்டும்.  வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் ஆட்சிபுரிய வேண்டும். ஒற்றுமை இல்லாவிடின், கிழக்கு மாகாணம் விரைவில் பறிபோகும்.

அரசியலமைப்பின் உள்ளடக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கணிசமான வளங்களை, ஏனைய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்ய, அதிகாரம் பங்கீடு செய்யப்பட்டு, ஆட்சியமைக்கப்படவேண்டும்.

முஸ்லிம்கள், தமிழர்களையோ தமிழர்கள், முஸ்லிம்களையோ ஏமாற்ற முடியாது என்பதைச் சிந்தியுங்கள், அதேநேரத்தில், எம்முடன் வாழும் சிங்களவர்களும் அநீதி செய்யாது வாழவேண்டும்.

நான், யாழ். கட்டளைத் தளபதியுடன், இன்று (நேற்று) மீள்குடியேற்றம் சம்பந்தமாகப் பேசினேன். நாளை (இன்று) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி, காணிகளை விடுவிக்கவுள்ளார்” என்றார்.

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலான நாளாந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வு மற்றும் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில், வடக்கு முஸ்லிம் சிவில் சமூகத்தால் வினவப்பட்டபோது,

“முதலமைச்சர் அலுவலகத்தில் பிரதம செயலாளர் ஒருவரையும் புனர்வாழ்வு அமைச்சில் உதவிச் செயலாளர் ஒருவரையும் நியமித்து, செய்ய வேண்டிய கருமங்கள் தொடர்பில், அவர்களுக்குத் தெரிவிக்க முடியும். உங்களுடைய தரப்பிலிருந்து 3 பேரைத் தெரிவுசெய்யுங்கள்” என சம்பந்தன் எம்.பி கூறினார்.

அதற்குப் பதிலளித்த முன்னாள் எம்.பியான ஹுனைஸ் பாரூக், மாவட்டத்துக்கு ஒருவர் என்ற அடிப்படையில், 5 பேரை நியமிக்குமாறு கோரியதற்கிணங்க, சம்பந்தனும் ஒத்துக்கொண்டார்.

Show More

Related Articles

Close