காணாமல்போனோர்களது குடும்பத்தாரின் ஒப்பாரி மற்றும் அழுகுரலை நிறுத்தவேண்டும்

 

கடத்தப்பட்டோர், காணாமல்போனோர்களது குடும்பத்தாரின் ஒப்பாரி மற்றும் அழுகுரலை நிறுத்துவதற்கான தீர்க்கமானதொரு முடிவினை நல்லாட்சி அரசாங்கம் எடுப்பதற்கான அழுத்ததைக் கொடுப்பதற்குச் சமாதானம் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பு (பி.எ.பி.டி) நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடு திரும்பியதும் இவ்வமைப்பின் தலைவர் அருட் திரு ஒஸ்வல்ட் பேர்த் அடிகளார் தலைமையிலான குழுவினர் அவரை நேரடியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்த உள்ளதாக அவ்வமைப்பின் மக்கள் தொடர்பாடல் ஊடக ஆலோசகர் எஸ்.பி.அந்தோனிமுத்து தெரிவித்தார்.

காணாமல்போனோர், உயிருடன் இருப்பார்களாயின் அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்ற விவரங்களையும், இல்லாதவர்களது விடயத்தில் உறுதியும் இறுதியுமான முடிவினை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் இதன் மூலம் அந்த மக்களது நாளாந்த அழுகுரலுக்கும் ஒப்பாரிக்கும் ஒரு முடிவு கட்ட முடியும்.

அத்துடன், அவர்களது கலாசாரம் மத அனுஷ்டானங்களையும் காணாமல்போனோர் மட்டில் செய்துகொள்வதுடன், இக்குடும்பங்களது அவலங்களுக்கும் ஒரு தீர்வாக அமைய வாய்ப்பாகவும் அமையும்.

சர்வதேச சமாதான தினமாகிய செப்டம்பர் 21ஆம் திகதி ‘யுத்தத்திலிருந்து சமாதானத்ததுக்கு’ என்ற தொனிப்பொருளில், மாபெரும் செயல் அமர்வினை பி.எ.பி.டி அமைப்பு நடத்தியிருந்தது.

சர்வமத தலைவர்கள், வடக்கு-கிழக்கு தென்பகுதிகளிலிருந்து வந்த புத்திஜீவிகளினது களிப்புடனானஆலோசனைகளை உள்ளடங்கிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதியுடனான சந்திப்பில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, அமைச்சர் மனோகணேசன் இராஜாங்க அமைச்சர் எ.எச்.எம்.பௌசி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் பங்கு கொள்வர் என்றும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Close