“புதிய அதிபர் நியமனம் சட்டரீதியாகவே மேற்கொள்ளப்பட்டது”

உடுவில் மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய அதிபர் நியமனம் சட்டரீதியாகவே மேற்கொள்ளப்பட்டது.  இந்நியமனத்தில் எவ்விதமான அரசியல் தலையீடுகளும் இல்லை என தென்னிந்திய திருச்சபையின் பேராயர் டானியல் எஸ்.தியாகராஜா தெரிவித்தார்.

vlcsnap-2016-09-07-19h49m58s16

உடுவில் மகளிர் கல்லூரி புதிய அதிபர் நியமனம் தொடர்பில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மாலை வட்டுக்கோட்டை தென்னிந்திய திருச்சபையின் பேராலயத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பேராயர் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உடுவில் மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய அதிபர் நியமனம் சட்டரீதியாகவே இடம்பெற்றது. மூன்றாம் தரப்பினரால் எங்களுடைய முயற்சிகளைக் கேலிக்கூத்தாக்குவதும் இடர் விளைவிப்பதும் வருந்தத்தக்க விடயமாகும். தவறான புரிந்துகொள்ளுதல், உண்மையை மறைத்தல்,  உண்மையை மூடுதல் காரணமாகவே இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

192 வருட பாரம்பரிய மிக்க கல்லூரியில் சுமார் ஆயிரத்து 300 மாணவிகள் கல்வி கற்று வரும் நிலையில் 20, 30 பிள்ளைகளை வைத்துக்கொண்டு மூன்றாம் தரப்பினரால் எங்களுடைய முயற்சிகளைக் கேலிக்கூத்தாக்குவதும் இடர் விளைவிப்பதும் வருந்தத்தக்க விடயமாகும்.

இம்மாதம் 7ஆம் திகதி புதிய அதிபர் திருமதி ஜெபரட்ணத்திற்கு நியமன ஆராதனை வழிபாடு நடைபெற்றது. இதன்போது மூன்று அல்லது நான்கு ஆசிரியர்களைத் தவிர ஏனைய ஆசிரியர்கள், தென்னிந்திய திருச்சபையின் செயற்குழு உறுப்பினர்கள், ஆளுநர் சபை உறுப்பினர்கள்,  துறைத்தலைவர்கள் மற்றும் இதர நிறுவனங்களின் அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.

எனவே பிள்ளைகளை நீங்கள் படிக்க அனுப்புங்கள். பிள்ளைகளை நீங்கள் உங்களுடைய கிளர்ச்சிகளுக்காக பயன்படுத்தாதீர்கள். இங்கே பிள்ளைகள் ஏதாவது குறைகளில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு எவ்விதமான தண்டனையோ கண்டிப்புக்களோ இருக்கமாட்டாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அமைதிக்கு யாராவது பங்கம் விளைவித்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

உடுவில் மகளிர் கல்லூரி பிரச்சினையானது ஒரு உள்வீட்டுப் பிரச்சினை. இதில் வெ ளியார் தலையீடு செய்து அதை பூதாகரமாக வெளிப்படுத்தி பிள்ளைகளை தெருவிலே வைத்து பிள்ளைகளுடைய நல் வாழ்க்கையை குலைத்திருப்பது வேதனைக்குரியது. அது தவிர எங்களுடைய தென்னிந்திய திருச்சபையைச் சேராத குருமார்களுக்கு இதிலே எந்தவிதமான தொடர்பும் இல்லை. உரித்துமில்லை. அவர்கள் தான் இதனை முன்னின்று நடத்துகிறார்கள். அவர்களிலே ஒரு குருவானவர் அரசாங்க பாடசாலையிலே கல்வி கற்பிக்கின்ற ஒரு ஆசிரியராவார்.

எனவே மாணவ சமூகம் மற்றும் பெற்றோர் சமூகத்தை அன்போடு கேட்டுக் கொள்வது என்னவெனில்  எமக்கு ஒத்துழைப்புத்தாருங்கள். புதிய அதிபருடைய வழிகாட்டலின் கீழ் பிள்ளைகள் வளப்படுத்தப்பட இடம்கொடுங்கள்.

இதேவேளை இன்று (நேற்று) காலையிலே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் என்னைச் சந்தித்து கலந்துரையாடினார்கள். இவர்களுடன் எமது செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதன்போது குறித்த பெற்றோர்கள் மூன்று கோரிக்கைகளை விடுத்தார்கள்.

முதலாவதாக பழைய அதிபரை இரண்டு வருடங்களுக்கு வைத்திருங்கள் என்று கேட்டார்கள்.   இரண்டாவது பிள்ளைகளுக்கு ஏதாவது பழிவாங்கல்கள் இருக்கக்கூடாது என்று கூறினார்கள். மூன்றாவது ஆசிரியர்கள் யாராவது இதில் தவறாக சம்பந்தப்பட்டிருந்தால் நீங்கள்  நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

இதற்கு தெளிவாக அவர்களுக்குக்கு நான் பதிலளித்தேன். புதிய அதிபர் நியமிக்கப்பட்டு விட்டார். பொறுப்பெடுத்துவிட்டார். பழைய அதிபர் இழைப்பாறி விட்டார். ஆகவே முதலாவது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படமுடியாது என்று கூறினேன். . அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டார்கள். இரண்டாவது மூன்றாவது கோரிக்கைகள் நிச்சயமாக கவனத்தில் எடுப்பதாக உறுதியளித்தேன்.

அதுமட்டுமன்றி பெற்றோரின் பங்களிப்பை வைத்து கல்லூரியினை நடாத்துவதற்குரிய திட்டங்களை உருவாக்குவீர்களா எனக் கேட்டபோது இதற்கு மனப்பூர்வமான சம்மதத்தை நான் கொடுத்திருக்கிறேன். கல்லூரி தொடர்பான தவறுகள் பிரச்சினைகள் இருந்தால் அதனுடைய முகாமையாளர் இருக்கின்றார். அதற்குமேல் தலைவராகிய நான் இருக்கின்றேன். என்னுடைய கவனத்திற்கு எப்பொழுதும் கொண்டு வரலாம். அதற்கேற்ற நடவடிக்கை எடுத்து நல்ல முறையிலே கல்லூரி நடைபெறுவதற்கு ஒழுங்கு செய்வோம் எனத்  தெளிவாகக் கூறிக் கொள்கிறேன்.

இது தென்னிந்திய திருச்சபைப் பாடசாலை. தென்னிந்திய திருச்சபையின் பேராயருக்கே இறுதியான முடிவு எடுக்க முடியும்.  இப்பொழுது பேராயர் நான். எனக்கு முன்பிருந்த பேராயர்களும் கல்லூரிக்கு அதிபர்களை நியமித்தார்கள். தற்போது என்னுடைய பொறுப்பு. நான் நியமித்திருக்கிறேன் என்றார். நேற்று மாலை 5 மணியளவில்  புதிய அதிபரிடம் தனது கடமைகளையும் பொறுப்புக்களையும் முன்னாள் அதிபர் ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்று வழமைபோல் பாடசாலை நடைபெறும்.

Show More

Related Articles

Close