‘வழிபட யாருமில்லாத இடங்களில் விகாரைகள் எதற்கு?’

kilinochchi-buddha-statue-3

தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அமைக்கப்படும் விகாரைகளும் புத்தர் சிலைகளும் ஆக்கிரமிப்பின் அடையாளங்கள். சிறுபான்மை தேசிய இனங்களின் உணர்வுகளை மதித்து, நாட்டில் சமாதான முன்னெடுப்புகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்’ எனத் தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திகுமார், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ‘சிறுபான்மை தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் நல்லாட்சிக்கான இந்த அரசை பதவிக்கு கொண்டு வருவதற்காக பாரிய பங்களிப்பை வழங்கியிருக்கின்றனர். நல்லிணக்கம். சமாதானம், சமூக நீதி, சட்டவாட்சி என்பன நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவர்கள் இந்த அரசாங்கத்தைப் பதவிக்கு கொண்டு வருவதற்குரிய பங்களிப்பை வழங்கியிருந்தனர். எனவே, இந்த மக்களுடைய நம்பிக்கைகளையும்  உணர்வுகளையும் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு சமாதானத்தை எட்டுவதற்கு முயற்சிக்க வேண்டும். இதற்கு முதலில் இந்த மக்களிடத்திலே நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் அவசியமாகும்.

வெற்றிக்கொள்ளப்பட்ட மனப்பாங்குடன் எமது மக்களைப் படையினர் நடத்துவதனாலேயே இவ்வாறான சமூகப் பதற்றங்கள் உருவாக்கின்றன. இராணுவத்தினரால் உருவாக்கப்படும் பௌத்த விகாரைகளையும் பொது இடங்களில் நிறுவப்படும் புத்தர் சிலைகளையும் மக்கள், ஆக்கிரமிப்பின் அடையாளமாகவே நோக்குகின்றனர். அத்துடன் இயக்கச்சி, பாரதிபுரம், பரவிப்பாஞ்சன் போன்ற இடங்களில் தனியார் காணிகளில் தங்கியிருக்கும் படையினர், அந்த முகாம்களைப் பலப்படுத்தி வருவதும் மக்களிடத்திலே கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இவையெல்லாம் நல்லெண்ணத்துக்கும் நல்லுறவுக்கும் எதிரானதாகவே அமைகின்றன.

தமிழ் மக்கள், பௌத்தத்துக்கு எதிரானவர்கள் அல்லர். பௌத்தத்துக்கும் இந்து மதத்துக்கும் இடையேயான பிரிகோடு மிகவும் மென்மையானது. இரு மதங்களின் கலாசார அடிப்படையில் பல பொதுவான விடயங்கள் காணப்படுகின்றன. வட இலங்கையில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்றுக் குறிப்புகள் ஆதாரங்களாக காணப்படுகிறன. ஆனால், பௌத்த மதத்தை பின்பற்றுவோர் இல்லாத மன்னார் திருக்கேதீஸ்வரம், முல்லைத்தீவு கற்சிலைமடு சிவாலயம் தற்போது, கிளிநொச்சி கணகாம்பிகை அம்மன் ஆலயம் போன்ற இடங்களில் இராணுவத்தினரால்  உருவாக்கப்படும் பௌத்த விகாரைகளை ஆக்கிரமிப்பின் வெளிப்பாடாகவே நோக்க வேண்டியுள்ளது.

இதனை இனவாத சக்திகள் தமக்கு சாதமாக பயன்படுத்தி தேசிய இனங்களுக்கு இடையேயான பிளவுகளை ஆழப்படுத்துவதற்கு துணைபோகும் செயலாவே இது அமையும். எனவே தமிழ் மக்களின் நம்பிகையையும், உணர்வுகளையும் கவனத்தில் எடுத்து சமூக பதற்றத்தை தணிப்பதோடு சமத்துவமும், நல்லிணக்கமும் கொண்ட சமூகங்களாக இலங்கையில் உள்ள அனைத்து தேசிய இனங்களும் வாழ்வதற்குரிய நிலையை உருவாக்க வேண்டும். அத்துடன், நல்லாட்சிச் சூழலை ஏற்படுத்துவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்;;’ என அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Close