மாணவர்களுக்குத் தொல்லையாகும் ஒலிபெருக்கியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை – நீதிபதி இளஞ்செழியன்

Jaffna templeநாடளாவிய ரீதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருக்கின்ற சூழ்நிலையில் மாணவர்ளுக்குத் தொல்லை கொடுத்து வருகின்ற ஆலயங்கள் கோவில்களின் ஒலிபெருக்கிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை விடுத்துள்ளார்.

பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் அமைதியான முறையில் பாடங்களை ஆயத்தம் செய்வதற்கு ஆலயங்கள் கோவில்களின் ஒலிபெருக்கிகள் இடையூறாக இருந்து தொடர்ச்சியாகத் தொல்லை கொடுத்து வருவதாக செய்யப்பட்டுள்ளன.

இதனால், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துகின்ற கோவில்கள் ஆலயங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு யாழ் குடாநாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுக்கும்படி நீதிபதி இளஞ்செழியன் யாழ் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

பொதுமக்களுக்குத் தொல்லை கொடுக்கும் ஒலிபெருக்கிகள் தொடர்பான பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 81 ஆம் பிரிவின் கீழேயும், வணக்கத்தலங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தினால் ஆசிக் வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் பிரகாரமும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.

பொதுமக்களுக்குத் தொல்லை கொடுக்கும் வகையில் சத்தமாகப் பயன்படுத்தப்படுகின்ற ஒலிபெருக்கிகள் விடயமாக நீதிமன்றங்கள் பல நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்திருக்கின்றன.

ஆயினும், ஆலயங்கள், கோவில்கள் மற்றும் வணக்கத் தலங்கள் தொடர்ந்து நீதிமன்றப் பணிப்புரைகளை மீறிச் செயற்பட்டு வருகின்றன. இது சட்ட மீறல் நடவடிக்கையாகும்.

எனவே, பரீட்சை நடைபெறும் காலத்தில் தொல்லை கொடுக்கும் வகையில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தும் ஒலிபெருக்கிப் பாவனையாளர்களை உடனடியாகக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கைது செய்யப்படுபவர்களுக்கு எதிராக அந்தந்த நீதவான் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்து குற்றவியல் நடவடிமுறை கோவையின் 98 ஆம் பிரிவின் கீழ் ஒலிபெருக்கியே பாவிக்கக்கூடாது என்ற தடை உத்தரவுகளைப் பெற்று சட்டத்தை இறுக்கமாக நடைமுறைப்படுத்தவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர்களின் எதிர்காலம் பற்றிய சிந்தனையில்லாமல் செயற்படுகின்ற ஒலி பெருக்கி பாiனையாளர்கள் கைது செய்யப்படுவதுடன், அவர்களுடைய ஒலி பெருக்கி சாதனங்களும் கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்படும்போது, தற்போதைய பரீட்சை முடியும் காலம் வரையில் அவர்கள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார்.

Show More

Related Articles

Close