அரசு வேலை கோரி வேலையில்லா பட்டதாரிகள் யாழ்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

அரசுத் துறையில் வேலைவாய்ப்பு வழங்கக் கோரி, வேலையற்ற பட்டதாரிகள் சனியன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

யாழ் அரச செயலகத்திற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கான அழைப்பை வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் விடுத்திருந்தது.

பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வது தேசியக் கொள்கையாக இருந்து வருகின்ற போதிலும் கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து அரச சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்குப் பட்டதாரிகளை அரசுகள் உள்வாங்கவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் குற்றம் சுமத்தியிருக்கின்றனர்.

அரசாங்கம் பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதில் பாராமுகமாகவே நடந்து கொள்கின்றது என்றார் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் துஷாந்தன்.

 

தென்பகுதியைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் சிலரும் வேலையற்ற பட்டதாரிகள் சங்கங்களின் ஒன்றியத் தலைவர் முனசிங்க தலைமையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை, நாடளாவிய ரீதியில் 30 ஆயிரம் பட்டதாரிகள் வேலையற்றவர்களாக இருக்கின்றார்கள்.

ஆனால், அரசத் திணைக்களங்களில் சுமார் 50 ஆயிரம் வெற்றிடங்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் வெறும் பேச்சளவிலான உத்தரவாதங்களைக் கைவிட்டு வேலையற்றிருக்கின்ற பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்றார் பட்டதாரிகள் சங்கங்களின் ஒன்றியத் தலைவர் முனசிங்க.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வழங்கும் விவகாரம் குறித்து அரசத் தரப்பினரின் கருத்துக்களை உடனடியாகப் பெற முடியவில்லை.

Show More

Related Articles

Close