திருமலை‍-குமாரபுரம் படுகொலை வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள 6 முன்னாள் இராணுவவீரர்களுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும்: அரசதரப்பு வழக்கறிஞர்.

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் குமாரபுரம் படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவ வீரர்கள் 6 பேருக்கும் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தை கேட்டுள்ளார்.

20 வருடங்களுக்கு முன்பு 1991 பிப்ரவரி 11-ம் தேதி இடம் பெற்ற இந்த படுகொலை சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 26 தமிழர்கள் இராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 39 பேர் காயமடைந்தனர்.

அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 27ம் திகதி தொடக்கம் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின் போது அரச தரப்பு மூத்த சட்டத்தரனியான சுதர்சன டி சிவ்வா இந்த கோரிக்கையை நீதிமன்றில் முன் வைத்தார்.

இந்த கொலைகளை குறித்த 6 பேரும் செய்துள்ளமை சாட்சியங்களினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தனது வாதத்தின் போது கூறினார்

குற்றச் சம்ம்பவம் நடந்து பல வருடங்கள் கடந்து விட்ட நிலையில் முறைப்பாட்டாளர்களின் சாட்சியங்களில் சில குளறுகள் காணப்படலாம்.

இருப்பினும் இந்த குளறுபடிகளும் மாற்றங்களும் எதிரிகள் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுபட போதுமானது அல்ல என்றும் அரச சட்டத்தரனியினால் சுட்டிக் காட்டப்பட்டப்பட்டுள்ளது .

சம்பவ தினத்தில் தெகியத்த இராணுவ முகாமில் சேவையிலிருந்த 8 இராணுவ வீரர்கள் எதிரிகளாக மூதூர் போலிஸாரால் குறிப்பிடப்பட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

1996ம் ஆண்டு மூதூர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணை பின்னர் திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.

யுத்த சூழ்நிலையில் தங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக காரணம் காட்டி எதிரிகள் இந்த வழக்கை அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

மேல் முறையீட்டு நீதிமன்ற உத்தரவின் பேரிலே இந்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றன.

எதிரிகளாக குறிப்பிடப்பட்டுள்ள எட்டு இராணுவ வீரர்களில் இருவர் மரணமடைந்துள்ள நிலையில் தற்போது அனுராதபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு விசாரணை ஏனைய ஆறு பேருக்கு எதிராகவே நடைபெற்று வருகின்றது.

ஏற்கெனவே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த அந்த 6 இராணுவ வீரர்களும் வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணை தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

BBC

Show More

Related Articles

Close