தன்னுடைய பிரசவத்தை தானே படம் எடுத்த பெண்! – நெகிழ வைக்கும் படங்கள்

லிபோர்னியாவைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவர், தனக்கு குழந்தை பிறக்க ஆரம்பிப்பதில் இருந்து, குழந்தை வெளிவருவது வரை அனைத்தையும் புகைப்படங்களாக எடுத்து, அதை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார்.

கலிபோர்னியாவில் வெடிங் ஃபோட்டோகிராஃபராக பணியாற்றி வருபவர் லிசா ராபின்சன் வார்ட். தன்னுடைய பிரசவத்தை படம் பிடிக்கவேண்டும் என்பது அவருடைய நீண்ட நாள் கனவு, ஆசை. இதற்காக, வீட்டில் பிரசவ வலி ஆரம்பித்த உடனேயே,  வலியை பொருட்படுத்தாமல் தனக்குத் தானே படம் எடுக்க ஆரம்பித்துவிட்டார். கணவர் காரை ஓட்டிச் செல்ல காருக்குள் ஏறுவது முதல், வலியால் துடிப்பது வரை அவரே படம் எடுத்தார். ஒரு கட்டத்துக்கு மேல் தன்னால் முடியாமல் போகவே, தன்னுடைய கணவரிடம் அந்த பணியை ஒப்படைக்கிறார்.

பிரசவ அறைக்குள் சென்றதும் கேமரா இவரை பின் தொடருகிறது. மருத்துவர்கள் அவசர அவசரமாக தங்களது பணியினை செய்ய ஆரம்பிக்கிறார்கள். மிகப்பெரும் போராட்டத்திற்கு பிறகு அனோரா எனும் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுக்கிறார். குழந்தை அசுத்தங்களோடு, ரத்தத்தையும் உடலில் பூசியபடி வெளியே வருகிறது. பிறகு தொப்புள் கொடியை ‘கட்’ செய்கிறார்கள். குழந்தையை சுத்தம் செய்கிறார்கள். பிறகு, லிசா தன் மார்போடு குழந்தையை அணைத்துக் கொள்கிறார். பின்பு, பால் தருகிறார். இப்படி ஒவ்வொரு நிகழ்வையும் அப்படியே படம் பிடிக்கிறார் அவரது கணவர்.

”நான் சிறிதும் நினைத்துப் பார்க்காத அளவுக்கு நான் வலி தாங்கியாக இருந்திருக்கிறேன். கிட்டத்தட்ட 14 மணி நேரம் பிரசவ வலியைப் பொறுத்திருக்கிறேன். கேமரா என்னை பார்த்துக் கொண்டிருக்கிறது என்கிற என்னுடைய கவனம் பிரசவ வலியை குறைத்திருக்கிறது. ‘பிரசவ அறைக்குள் படம் எடுக்கலாமா….?’ என்று மருத்துவரிடம் கேட்டபோது, எடுத்துக் கொள்ளலாம் என்றார்கள்.

பனிக்குடம் உடைந்து வெளியேறும்போது செயலற்றுப் போயிருக்கிறேன். அதிலிருந்து மீண்டும் மீண்டும் என்னுடைய வலியைப் பொறுத்திருக்கிறேன். என் மகள் மிகவும் அழகானவள், மென்மையானவள். மிகவும் எளிதாக வெளியே வந்துவிட்டாள். எங்கள் மகள் வெளியே வந்ததும், முதல் முறையாக பார்த்த என் கணவர் அழுதுவிட்டார். நானும்தான். என்னுடைய தோளோடு தோள் ஒட்டி என் மகள் என் மார்பில் பால் கொடுக்கும்போது ஆகாயத்தில் பறந்தது போல உணர்ந்தேன்.

இந்த படத்தை எப்போது எடுத்து பார்த்தாலும், ஒரு பரவச நிலையை உணர்கிறேன். இந்த உலகில் நான் அதிர்ஷ்டம் செய்தவளாக உணர்கிறேன்” என அவருடைய பிரசவப் படங்களை எல்லாம் தொட்டு பரவசப்படுகிறார் லிசா ராபின்சன் வார்டு.

நன்றி விகடன்

Show More

Related Articles

Leave a Reply

Close