ஸ்ரீநகர் பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு அமுல்!

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைவதையொட்டி ஸ்ரீநகர் பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தடை உத்தரவு இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) அமுல்படுத்தப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நாளை கருப்பு தினமாக அனுசரிக்க பிரிவினைவாதிகள் முயற்சித்து வருவதாகவும் பிரிவினைவாதிகள் வன்முறையில் ஈடுபடலாம் எனவும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டுருப்பதாகவும் பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளதை அடுத்தே மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பொது மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவம் மற்றும் அத்தியவசிய நடவடிக்கைகளுக்கு இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பகுதியில் பாதுகாப்பு படையினருடன், பொலிஸாரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இரத்து செய்யப்பட்டதுடன், அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து குறித்த பகுதியில் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெற கூடாது என்பதற்காக இணைய சேவைகள் முடக்கப்பட்டதுடன் சில காலம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Close